பக்கம்:அரை மனிதன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

9


 வரும்' இப்படி ஒருபக்கம் விளம்பரம். மற்றொரு பக்கம் 'கடின உழைப்பிற்கு ஈடு எதுவும் இல்லை'. இதுதான் நம் நாட்டுச் சித்தாந்தம். எதிலும் முழுமையான நம்பிக்கை கிடையாது. அதிருஷ்டத்தை நம்பியும் வாழவேண்டும். உழைப்பையும் நம்பி வாழவேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரை துரதிருஷ்டத்தை நம்பியும் வாழ முடியும் என்பதற்கு என் வாழ்க்கை ஒர் எடுத்துக்காட்டு.

அம்மா எல்லோரைப் போலவேதான் இருந்தார்கள். அவர்களைப் பற்றி எப்படி நான் தனித்து எழுதமுடியும். ஊரிலே உலகத்திலே இல்லாத தனி அம்மா என்று எப்படி அவர்களைச் சொல்லமுடியும். ஒன்றே ஒன்று இரண்டுக்கு மேல் வேண்டாம் என்ற விதியைக் கடைப் பிடிக்கவில்லை. அவர்கள் காலத்திலே மூன்றுபேர் திட்டமிட்ட குழந்தையின் அளவு கோல் என்று நினைக்கிறேன். அதனால்தான் தங்கை ஒருத்தியைத் தாராளமாக இந்த உலகத்துக்குத் தந்தார்கள்.

"அது ஒண்னு பொறக்காமல் இருந்தால் கவலையே இல்லை". என்று அம்மா சொல்வார்கள். என்னைப்பற்றி அப்படிப் பேசுவது இல்லை. "அவன் நொண்டி. எப்படியாவது பிழைத்துக் கொள்ளுவான்" என்றுதான் சொல்லி வந்தார்கள். எனக்கு அது ரொம்ப ஆச்சரியமாகத்தான் இருந்தது. உலகத்திலே ஏதாவது குறை இருக்கிறவர்கள்தான் அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள். இன்றைக்கு முன்னுக்கு வந்தவர்கள் வருகிறவர்கள் யார்? படிப்பே இருக்காது; அவர்களுக்குப் பட்டங்கள் பதவிகள் எப்படி வருகிறது? அவர்கள் தம் குறைகளைப் போக்கிக் கொள்கிறார்கள். சங்கீத வித்வான்கள் பலர் குருடர்களாகவும் இருக்கிறார்கள். குருடு செவிடு பள்ளிக் கூடங்களில் முதன்மையாகத் தேறி வெற்றி பெறுகிறார்கள். என்னைப்பற்றி யாரும் அவநம்பிக்கை கொள்வதில்லை.

நான் தம்பியிடம் சொன்னேன். அவன் கேட்டால் தானே. அதுசரி எந்தத் தம்பி அண்ணன் பேச்சைக் கேட்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/11&oldid=1461917" இலிருந்து மீள்விக்கப்பட்டது