பக்கம்:அரை மனிதன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

அரை மனிதன்



பெண்ணுக்கு நல்ல வாழ்வு அமையும் சூழ்நிலை உருவாக வேண்டும். ஆண் உழைப்பதற்கு ஏற்ப வாய்ப்புகள் அமைய வேண்டும். இப்படி நினைக்கிறேன். எப்படிச் செயல்படுத்துவது? நான் நினைக்கிற சமநிலைச் சமுதாயம் அமையுமானால் இந்தக் குற்றங்கள் குறைந்துவிடும். தேவைக்கு மேல் யாரும் சேர்க்க மாட்டார்கள். அதிகம் உழைக்க வேண்டியதும் இராது. மனிதன் மனிதனாக வாழ முடியும். அவன் இரும்புப் பெட்டியில் போய் ஒளிந்து கொள்ளவேண்டிய தேவையே ஏற்படாது.

இப்பொழுது என் நிலைமை. நான் உள்ளே போவதைத் தவிர வேறு வழி இல்லை. தம்பி துணிந்து இந்த உண்மையைச் சொல்லமாட்டான். என்னைக் காப்பாற்ற அவன் முனையமாட்டான். நான் வெளியே இருந்தால் அவன் அம்மா கண்ணுவை அடைய முடியாது. நான் உள்ளே தள்ளப்பட்டு விட்டால் அவன் சுலபமாக அவளை விலைக்கு வாங்கிவிட முடியும். நெக்லஸ் என்ன ஒரு வீடே கூட வாங்கிக் கொடுக்க முடியும். அவன் இன்பத்துக்கு அவள் கருவியாக இருக்க வேண்டும். எத்தனை பெரிய இடங்களைப் பார்த்து இருக்கிறேன். பகலில் ஆள் இருக்கமாட்டான். இரவில் மட்டும் தலை காட்டுவான். அவள் கவுரவமான வாழ்க்கை நடத்துவாள். அந்த நிலையில் அவளுக்கு அவன் கவுரவம் அளிக்க முடியும்.

அவனுக்கு எப்படித் தெரியும் அவள் ரங்கனை மணக்கப் போகிறாள் என்று. உதிரிகள் என்றுமே உதிரிகளாகத்தான் இருக்கப் போகிறார்கள் என்றுதான் அவனைப் போன்றவர்கள் எண்ணுவார்கள். அவனுக்கு இந்த உண்மை தெரிந்தால் நிச்சயமாக மனம் மாறுவான். இப்படி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது வெளியே என் தம்பியும் அம்மா கண்ணுவும் வந்து நின்றார்கள்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “நான் பணத்துக்கே மசியவில்லை. பலத்துக்காகவா பணியப் போகிறேன்,” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/114&oldid=1462011" இலிருந்து மீள்விக்கப்பட்டது