பக்கம்:அரை மனிதன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

113



சொல்லி இருந்தாள். இப்பொழுது அவள் பணத்துக்குப் பணிந்து விட்டாளே. என் விடுதலைக்காக அவள் அந்தத் தவறைச் செய்யத் துணிந்துவிட்டாள் என்று நினைக்கிறேன். என் குடும்பத்தைக் காப்பாற்ற அவள் அவனோடு தொடர்பு கொண்டாள். இப்பொழுது என்னைக் காப்பாற்ற அவனோடு பிணையத் தீர்மானித்துவிட்டாள். சே! ஒரு தவறை அனுமதித்தால் தவறுகள் தொடர்ந்து நடக்கின்றன. அப்பொழுதே அவள் அந்தத் தவறுகளைச் செய்ய விட்டிருக்கக் கூடாது. அவள் என்னிடம் சொல்லி விட்டா தவறு செய்தாள்.

“எனக்கு ஒரு பெரிய உபதேசம் செய்தாள். நீங்கள் மானத்தோடு வாழ வேண்டியவர்கள். நடுத்தரக் குடும்பங்கள் தம் நிலை கெடக் கூடாது. அதை ஒட்டித்தான் இந்தச் சமுதாயத்தின் நன்மை ஒழுங்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன” என்று சொன்னாள். “என் நடத்தையைக் கேட்பவர் கிடையாது. நீங்கள் பசி எடுத்தால் தாழ்ந்த தொழிலுக்குப் போய் விடுவீர்கள். உடனே உன் அம்மா வீட்டு வேலை செய்யப் போய்விடுவார். நான் பசி எடுத்தால் அது நான் சொல்லத் தேவை இல்லை. என் அண்ணன் குடும்பம் தாழ்ந்து போவதை நான் ஒப்புக் கொள்ள முடியாது” என்றெல்லாம் பேசி அவள் விருப்பம் போல் நடந்து கொண்டாள். அவளை அந்த உதிரிகளின் நியாய அநியாயங்களைக் கொண்டு அப்பொழுது அளவிட்டேன். அப்பொழுது அவளைச் சரி என்று கூறமுடியாவிட்டாலும் கண்டிக்க முடியாத நிலையில் இருந்தேன்.

இப்பொழுது நான் அவளை உயர்த்தி இருக்கிறேன். அவள் தேடிய ஒரு ஆம்படையானைத் தேடித் தந்த பிறகு அவள் மறுபடியும் மானம் கெடும் வாழ்வுக்குப் போவதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. அவள் இப்பொழுது என் தங்கை என்று ஏற்றுக் கொண்ட பிறகு அவளைத் தவறு செய்யவிடமாட்டேன். அவள் மாஜிஸ்ரேட்டை அழைத்து வருவாள் என்று எதிர்பார்த்தேன். அவள் என் தம்பியை அழைத்து வந்து விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/115&oldid=1154167" இலிருந்து மீள்விக்கப்பட்டது