பக்கம்:அரை மனிதன்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

15


 "அந்தத் திருட்டுப் பொருள் யார் கையில் இருக்கிறதோ அவர்கள்தான் திருடர்கள். அதுதான் இந்த நாட்டுச் சட்டம். எங்கள் உழைப்பால் உருவாக்கப்பட்ட உன்னை அவள் முழுவதும் வசப்படுத்திக் கொண்டாள். இப்பொழுது யார் திருடன் என்பதை அவளுக்கு எடுத்துச் சொல்" என்றேன்.

அதற்குள் போலீஸ்காரர் ஒருவர் அங்கு வந்து விட்டார். என்னைப் பிடித்து இழுத்துச் சென்றார்.

"இது குடும்ப விவகாரம்" என்றேன்.

அவர் தன் வாழ்நாளில் இதைப்போலச் சிரித்து இருக்க மாட்டார். காரிலே செல்லும் ஒரு சுகவாசிக்கும் காலிலே செல்லும் ஒரு நொண்டிக்கும் உறவு இருக்கிறது என்றால் அவரால் எப்படி நம்ப முடியும். அந்த 'ஒனர்' மெச்சிக் கொள்வதற்காக மறு கன்னத்தில் அவர் ஒரு அறை விட்டார்.

நான் எவ்வளவு சீக்கிரம் இயேசு நாதராக உயர்த்தப் பட்டேன் என்பதை அப்பொழுது கொஞ்ச நேரம் சிந்தித்துப் பார்த்தேன்.

அவன் அவளுக்கு வண்டியோட்டினான். அப்படி அவன் என் பார்வையில் பட்டான். அவளுக்கு என்னைப் பற்றிக் கொஞ்சம் பயம் ஏற்பட்டது. அவர்கள் வீட்டில் புகுந்து திருடப் போகிறேன் என்று நம்பி விட்டாள். அவன் என் தம்பி என்ற பாசம் என்னைத் தடுத்தது. அவனுக்கு நான் அண்ணன் என்பதால்தான் அவன் என்னை அடித்தான். நான் அங்கே ரயிலடியில் சுற்றித் திரிவது அவமானம்தானே!

அப்படி என்றால் என்னைப்போல் எத்தனை பேர் இங்குச் சுற்றித் திரிகிறார்கள். அது இந்தச் சமூகத்துக்கு அவமானம்தானே. யார் இதை எண்ணிப் பார்க்கப் போகிறார்கள். கால் இல்லாவிட்டால் பொதுவாக ஒதுக்கப்படுவார்கள். ஆனால் நான் இங்கு ஒதுக்கப்படவில்லை. நான்தான் அவர்கள் தலைவன் என்ற கவுரவத்தை அளித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/17&oldid=1149777" இருந்து மீள்விக்கப்பட்டது