பக்கம்:அரை மனிதன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

17



"அதுதான் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்தப் பெண் பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கூடத்திலே எல்லாம் ஒரே ஊதா; இல்லாவிட்டால் ஒரே வெள்ளை; இல்லா விட்டால் ஒரே ரோஜா."

"அதுதாண்டா ராஜா சீருடை என்பது. நம்ப போலீசுகார அண்ணன் எல்லாம் காக்கி. டிராபிக்குப் போலீசு எல்லாம் வெள்ளை. அப்பத்தான் ஒரு ஒழுங்கு இருக்குது”.

"நாம்கூட ஏதாவது ஏன் ஒரு யூனிபாரம் தைத்துப் போட்டுக் கொள்ளக் கூடாது."

"நாம் உதிரிகள். நாம் இப்படி ஒரு கூட்டம் இருப்பதே பலபேருக்குத் தெரியாது. அப்புறம் நம்மை வேட்டை ஆட ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் உள்ளே போக வேண்டியதுதான்".

அதற்குள் ஒருவன் பேசினான்.

"உள்ளே போனால் என்ன! வெளியே இருந்தால் என்ன! எல்லாம் ஒன்றுதான்".

அது அவன் அனுபவமாக இருந்தது.

அதுக்கப்புறம் ஒரு "டீ" அடித்துவிட்டுப் படுத்துக் கொண்டோம். நான் மட்டும் அதிகமாகப் படம் பார்க்கப் போவது இல்லை. என் கூட்டம் அநேகமாகத் தியோட்டரில் தான் இருப்பார்கள். அவர்கள் பார்க்காத படமே இல்லை.

நான் அப்பொழுது நினைத்துப் பார்த்தேன். வாழ்க்கை பெரிய பங்காளக்களில் தானா இருக்கிறது. கூடப்பிறந்தவன் தான் தம்பியா, இங்கே இருக்கிறவன் ஒவ்வொருவனும் என் தம்பிதான். ஆனால் என் தங்கை அவள் தன் கணவனோடு வாழ்கிறாள். அவளுக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்து விட்டோம். நான் அவர்களைப் பற்றிக் கவலைப்படுகிறேன். அவர்கள் என்னைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/19&oldid=1461926" இலிருந்து மீள்விக்கப்பட்டது