பக்கம்:அரை மனிதன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

45


 குடும்பங்களில் அவனுக்கு மணமாக வேண்டுமே என்பதற்காகவது பெண்ணை முதலில் மணம் முடிப்பார்கள். தங்கையை வைத்துவிட்டு அண்ணனுக்கு மணம் முடிக்க மாட்டார்கள். அப்படி எனக்கு ஒரு அண்ணன் வாய்க்காமல் போய் விட்டான். நான் வெளியே வந்திருக்க மாட்டேன். அவன் அன்பில் வாழ்ந்து இருப்பேன். 'என்னமோ ஓடிவிட வேண்டும்' என்று தோன்றுகிறது. சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டேன். யாரோ என்னை அடித்துக் கொண்டு போய்விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். அந்த பாக்கியம் எனக்குக் கிடைத்திருந்தால் அதற்காக நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். அந்தமாதிரி தைரியசாலிகளைச் சந்தித்ததே இல்லை. என்னோடு நிரந்தரமாக வாழும் உறுதி எந்த இளைஞனுக்கும் இருந்ததை நான் பார்த்தது இல்லை."

"மேலும் இந்தப் போலீசுகாரர்கள் தொல்லை. அவர்களுக்கு அஞ்சியே மிக எளிதில் அங்கே புகல் அடைந்து விட்டேன். அந்த மாஜிஸ்ட்ரேட்டு என்னை வெளியே அனுப்பியதும் மறுபடியும் உள்ளே போக விரும்பவில்லை. ஒரே காரணம் நான் மறுபடியும் அந்த மாஜிஸ்ட்ரேட்டின் முகத்தில் விழிக்க விரும்பவில்லை. நான் 'நல்ல பெண்' என்று சொல்லிய பிறகு கெட்டவளாக விரும்பவில்லை.”

"நேரே இங்கே புகலிடம் அடைந்தேன். கொஞ்சம் நாள் கஷ்டமாகத்தான் இருந்தது. அப்புறம் சரியாகப் போய்விடுகிறது. என்னைப்போல் இங்கு ஒரு பைத்தியம்கூடச் சுற்றிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும்தான் எனக்கு தைரியம் வந்து விட்டது. அந்தப் பைத்தியத்திடம் யாரும் நெருங்க மாட்டார்கள். அவள் உடனே கல்லை எடுத்துக் கொள்வாள். அது அவளுக்குத் தற்காப்பு. எத்தனையோ பேர் அவளைப் பார்க்கிறார்கள். யாராவது துணிந்து அவளுக்கு ஒரு நல்ல சேலை தர முன் வருகிறார்களா யாரும் வருவது இல்லை. அந்தக் கந்தல்தான் அவள் பெண்மையை மறைத்தது. அண்ணே, 'டீக்காசு' என்பாள். அப்பொழுது மட்டும் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/47&oldid=1461955" இலிருந்து மீள்விக்கப்பட்டது