பக்கம்:அரை மனிதன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

47


 துணையிருப்பதைக் கண்டு நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். நான் மட்டுமல்ல. என்னைப்போல் பலபேர் இருக்கிறார்கள் என்பதில் ஆறுதல் அடைவேன். ஆனால் அங்கே என்ன வாழ்க்கையைக் கண்டிருக்கப் போகிறேன். சில இளைஞர்கள் வந்து அழைத்துக் கொண்டு போய்த் திருமணம் செய்து கொள்கிறார்கள். உண்மையில் அவர்களை வாழ்த்துகிறேன். மனிதப்பண்பு உடையவர்கள் அவர்கள். எனக்கு அந்த ஆசை இல்லை. யாருக்காவது ஏதாவது சேவை செய்ய வேண்டும். அதிலேதான் திருப்தி" என்று தன்னைப் பற்றி அவ்வப்பொழுது பேசுவாள். அதைக் கேட்பதில் எனக்குச் சிலசமயம் நேரம் போவதே தெரிவதில்லை. பின் அந்த பிளாட்பாரத்தில் விக்கிரமாதித்தன் கதையை யார் கேட்க முடியும். நல்லதங்காளின் கதையைத்தான் கேட்க முடிந்தது.

அங்கு வந்த சிறுவர்களின் கதை கேட்பதற்கு மிகவும் பரிதாபகரமாய் இருக்கும். உபரிப் பொருள்கள் சந்தைக்கு வருவதைப் போல் வீட்டுக்கு வேண்டாத பிள்ளைகள் தாம் இங்கு வந்து குவிகிறார்கள். அம்மாவை இழந்தவர்கள்; தந்தையின் பெயரைக் கேட்க மறந்து விட்டவர்கள், சிற்றன்னையின் கொடுமையால் சீரழிக்கப்பட்டவர்கள், எப்படியாவது பிழைக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்திற்காக ஓடி வந்தவர்கள் தாம் என் தோழர்கள்.

என் தங்கையிடம் எல்லோரும் மரியாதை காட்டினார்கள். அவள் நியாயமாக ஒரு மருத்துவமனையில் இருக்க வேண்டியவள். அவளைப்போல அன்பு செய்கிறவர்கள் இருந்தால் அந்த நோயாளிகளுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கும்.

அவள் சொன்னாள், "உனக்குக் கால் இல்லை. அதனால்தான் உன்னை விரும்புகிறேன்" என்று.

"என்னை விட்டு ஒட முடியாததால்” என்று சொல்லி இருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/49&oldid=1461957" இலிருந்து மீள்விக்கப்பட்டது