பக்கம்:அரை மனிதன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



56

அரை மனிதன்

மற்றவர்கள் வாழ்வதையும் பார்க்கிறேன். அவளும் அந்த இடத்தை விட்டுப் போக விரும்பவில்லை. அவளுக்கு அது பழக்கமான இடமாகிவிட்டது. அவள் எங்கே போகிறாள். எப்படிச் சம்பாதிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வதில்லை. ஆனால் அவள் தொழில் அவளுக்குத் தெரியும். அங்கே அக்கம் பக்கம் லாட்ஜிகளில் அவளுக்குச் சில சமயம் கிராக்கிகள் கிடைக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டேன். ஒருநாள் என் தம்பியின் காரை அங்கே பார்த்தேன். அதில் அவன் மனைவி இல்லை. அதற்கப்புறம்தான் அப்பாவுக்கு அவன்தான் மணியார்டர் செய்கிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். எனக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்தது. மறுபடியும் அவன் வாழ்க்கை என்னோடு எப்படி எல்லாம் பிணைகிறது என்று எண்ணிப் பார்க்கிறேன். சமுதாயத்தை மூன்று நிலைகளிலே பிரித்துப் பார்த்தேன். மேல்நிலை; இடை நிலை. எங்களைப் போன்ற உதிரிகளின் நிலை. உதிரிகளிடமும் அவர்கள் உறவு நீங்குவதில்லை என்பதை எண்ணிப் பார்க்க முடிந்தது. அவள் என்னோடு பழகும்போது பச்சிளங் குழந்தையாகப் பழகுவாள். அண்ணா! என்று அழைக்கும்பொழுது அவள் நெஞ்சுதான் அப்படிக் கூப்பிடும். இதயத்துக்கு வாய் வைத்திருந்தால் அது இப்படித்தான் பேசும். அவள் ரகசியமான சில உறவுகள் வைத்திருந்தாள். சில லாட்ஜிகளில் அவர்களுக்குக் கமிஷன் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். இவர்களுக்கு நல்ல உடை வசதிகள் எல்லாம் தந்து இருக்கிறார்கள். நான் ஒருவன் இல்லை என்றால் மறுபடியும் அவள் அந்த மேல் நிலைக்குத் தாவி விடுவாள். அதையும் அவள் எனக்காகத்தான் செய்கிறாள். நான் நொண்டி. அவள் என் காலாக இருந்து உழைக்கிறாள். எப்படி அவளை உதறித் தள்ள முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/58&oldid=1156913" இலிருந்து மீள்விக்கப்பட்டது