பக்கம்:அரை மனிதன்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அரை மனிதன்"உங்கள் மாலையை விரும்பவில்லை. கையில் கொடுத்தால் போதும்" என்றாள்.

அவன் கொடுத்துச் சென்றான்.

5

நான் அவள் வரவில்லையே என்று காத்துக் கிடந்தேன். எத்தனை காலம் பறவைகளைப் போலப் பறக்க முடியும். அவள் எதிர்காலம் என்ன? என் எதிர்காலம் என்ன? யார் பதில் சொல்வது எனக்கே விளங்கவில்லை. இங்கே ஒடும் ரயிலுக்கு எங்கே ஒட வேண்டும் என்று தெரியும். அதன் வெளிப்புறத்திலே அது போக வேண்டிய இடம் எழுதப்பட்டிருக்கிறது. ஒடும் பஸ்களுக்குக்கூட இங்கேதான் போக வேண்டும் என்று எழுதி மாட்டப்பட்டிருக்கிறது. வெளியே வாழும் மனிதர்க ளுக்கும் நோக்கம் இருக்கிறது. இங்கே சிதறிக் கிடக்கின்ற உதிரிகளுக்கு மட்டும் வாழ்க்கையில் நோக்கம் என்பதே இல்லை. அவர்களுடன் சேர்ந்த எனக்கு மட்டும் என்ன நோக்கம் உண்டாகப் போகிறது?

பணம் கிடைக்கும்; அதைச் சேர்த்து வைப்பது அவசியம் என்று உணராத சாதி இவர்கள். அந்த அந்த நிலைமைக் கேற்பப் பழக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். வாழ்வின் நோக்கத்தை நாமாக ஏற்படுத்திக் கொள்கிறோம். சில சமயம் மற்றவர்கள் ஏற்படுத்தித் தருகிறார்கள். இதுதான் வாழ்க்கை நெறி.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சூழ்நிலை தான் கற்றுத் தருகிறது. வாழ்க்கையில் நமக்கு லட்சியங்கள் இருக்க வேண்டும் அல்லது நம்மைச் சார்ந்தவர்களுக்கு லட்சியங்கள் இருக்க வேண்டும். தனி ஒரு மனிதனுக்கு இதுதான் அவன் லட்சியம் என்று உணர்த்த முடிவதில்லை. மற்றவர்களுக்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே லட்சியங்கள் உருவாகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/68&oldid=1149802" இருந்து மீள்விக்கப்பட்டது