பக்கம்:அரை மனிதன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அரை மனிதன்


அவன் பிறருக்காகத்தான் வாழ்கிறான் என்பது அமைந்து விடுகிறது. எனக்கு ஒரு குடும்பம் இல்லை. 'மே'-விற்கு ஒரு குடும்பம் இல்லை. ரங்கனுக்கு ஒரு குடும்பம் இல்லை. நாங்கள் எல்லாம் யாருக்காக வாழ்கிறோம். இங்கே யாரும் குடும்பம் அமைத்துக் கொள்ள முடியாது. எதிலும் எங்களுக்கு உறுதிப்பாடு இல்லை. ஏன் மத்தியதரக் குடும்பங்களிலும் இந்தக் கேள்வி மெல்லப் புகுந்து விட்டது. 'ஏதோ வாழ்கிறோம் என்று சொல்லுகிறார்களே தவிர எதுக்கு வாழ்கிறோம் என்று யாராலும் சொல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்தக் கேள்வி நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே ஒரு வழி இருக்கின்றது. அது யாருக்காக வாழ்வது என்பதை முடிவு செய்வதுதான்.

அவள் எனக்காக வாழ்ந்து வந்தாள். அது பெண்மைக்கே உரிய தனி இயல்பு. நான் சமுதாயத்துக்காக வாழ்கிறேன். இது எனக்கே உரிய தனி இயல்பு. அவள் என்னுடைய உறவை விரும்புகிறாள். ஆனால் என்னை அவள் விரும்பவில்லை. இது ஒரு புதுவகையான உறவு. உலகம் இதுவரை காணாத தனி உறவு. இப்படி நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பாமல் உறவு கொள்வதால் என்ன பயன்? விருப்பத்தால் தானே உறவே வளர்கிறது? வெறும் உறவால் என்ன லாபம்?

எங்களைக் கடந்து நாங்கள் யாருக்காவது பயன்பட வேண்டும். அதில்தான் வாழ்க்கை இருக்கிறது. உதிரிகள் எங்கும் போய்ச் சேர்ந்து கொள்வார்கள். மறுபடியும் அவர்கள் உதிரிகளாக முடிவில் பயன்படுவதுதான் வாழ்க்கையின் பயன் என்றால் அதற்காகவே பிறந்தவள்தான் அவள். சமுதாய நல்வாழ்வுக்கு அவள் பயன்பட்டாள். அவள் விளக்கியது போல் சமுதாய வாழ்வுக்கு அவள் அவசியம்தான். ஆனால் அவளுக்குக் கைம்மாறு அவள் ஒரு நடத்தை கெட்டவள் மறுபடியும் சமூகத்தில் அவளுக்கு இடம் கிடையாது. பெற்ற தாயும் தகப்பனுமே அவளுக்காகத் தலை முழுகினார்கள் என்றால் அது அவசியமில்லாத செலவுதானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/70&oldid=1461967" இலிருந்து மீள்விக்கப்பட்டது