பக்கம்:அரை மனிதன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

77


அந்த இரு கண்ணீர்த் துளிகளை வெளிப்படுத்தினாள். மனிதனின் சொற்கள் கருத்தை உணர்த்தத் தோற்றுவிக்கின்றன. அப்பொழுது இதயம் தன் கண்ணீரை வெளிப்படுத்தியது. அதன் மூலம் தன் உணர்வை எடுத்துக்காட்டுகிறது. அதுவும் தோற்றுவிட்டால் அழுகை வெளிப்படுகிறது. அவள் அழ வில்லை. இரண்டாவது நிலையிலேயே நின்று விட்டாள்.

"என்னை மன்னித்துவிடு" என்றேன்.

"எதற்காக அண்ணா?”

அப்பொழுதுகூட அவளைத் தங்கை என்று கூப்பிட என் னால் முடியவில்லை. அவளிடம் பாசம் இருந்தது. நாங்கள் பாசமலர்கள்தாம். அவை கனிந்து உறவு என்ற கனியாக மாற முடியவில்லை.

அவள் அந்த நிலையில் முழுமை அடைந்து விட்டாள். அவளுக்கு இதயம் இருக்கிறது. பொதுவாக அந்த மாதிரி வாழ்க்கை உடையவர்களுக்கு இதயம் இல்லை என்று சொல்லுவார்கள். இதயம் ஒரு கட்டுக்குள் அடங்கியது. ரொம்பவும் சின்னதுதான். அதை அவள் தொழிலாக நடத்தும் பொழுது அவள் எப்படி இதயத்தைப் பிறர்க்கு அளிக்க முடியும். இதயம் நல்ல பொருள்களைத்தான் தாங்கும்; கெட்ட ரத்தம் சென்றால் அது அங்கே சுத்தப்படுத்தப்படுகிறது. கெட்டதுகளை மட்டும் இதயம் ஏற்றுக் கொள்வதில்லை. அவள் பாசம், பற்று எதையும் பிறரிடம் காட்ட மறுத்து விட்டாள். அந்தச் சின்ன இதயத்தை எனக்குத் தந்தாள். நான் அவளிடம் ஒடும் நல்ல இரத்தமாக இருந்தேன். என் நினை வுகள் அவள் இரத்த ஓட்டத்தில் கலந்து கிடந்தன. இரத்தத்திற்கு A.O. என்றெல்லாம் பிரிவினை காட்டுகிறார்கள். அவள் இரத்தத்தில் A.O. இருந்ததோ இல்லையோ எனக்குத் தெரியாது. அதில் நான் இருந்தேன். "உங்கள் ரத்தத்தின் ரத்தம்; சதையின் சதை" என்ற பேச்சைப் பலமுறை கேட்டிருக்கிறேன். அதன் அர்த்தம் அவளோடு உறவு கொண்ட பிறகு தான் தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/79&oldid=1461976" இலிருந்து மீள்விக்கப்பட்டது