பக்கம்:அரை மனிதன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

89



"நீங்கள் இருக்கும்போது நாயே தேவை இல்லையே" என்றேன்.

"ஏன் திருடத் தானே வந்தாய்" என்று கேட்டாள்.

"திருடியதைத் திருப்பித் தர வந்தேன்" என்றேன்.

"குற்றம் செய்து விட்டு மன்னிப்புக் கேட்க வந்தாயா?”

"நான் ஒன்றும் சமயவாதி இல்லை மன்னிப்புக் கேட்க. சமயத்திற்குத் தக்கபடி நடந்து கொள்ள”

"இது உன் நெக்லஸ்தானே?”

"இது எனக்கு அளிக்கப்பட்ட நெக்லஸ்"

"அதை மீண்டும் உங்களுக்கே அளிக்க வந்திருக்கிறேன்"

"நீங்கள் தப்பி ஓட முடியாது"

"கோழையாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தானே இறைவன் காலை எடுத்து விட்டான். கோழைகள்தான் அஞ்சி ஒடி விடுவார்கள்."

"உங்களைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறேன். கையும் களவுமாகப் பொருள் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் அன்று திருடப் போவதாகச் சொன்னீர்கள். உங்கள் பின்னால் ஒரு கூட்டமே இருக்கிறது."

"வறுமை இருக்கும் வரை அந்தக் கூட்டத்தை ஒழிக்க முடியாது. உண்மைதான். அவர்களை ஒழிக்க வேண்டு மானால் நீங்களும் ஒரு படி கீழே இறங்கி வரவேண்டும். நீங்கள் சுகவாசிகள். அந்தச் சுகத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஏழைகளும் சுகப்படுவார்கள். அவர்கள் திருட வேண்டிய அவசியமே ஏற்படாது. அந்தக் கூட்டத்தை உங்களால்தான் ஒழிக்க முடியும். உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்".

"எங்களை வாழ விடமாட்டீர்கள் போல இருக்கிறது”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/91&oldid=1461988" இலிருந்து மீள்விக்கப்பட்டது