பக்கம்:அரை மனிதன்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

91இந்தக் கூட்டுக் குடும்பங்கள் சிதைவதையும் ஒன்றாகக் கூறலாம். அண்ணன் தம்பிகளே ஒருவர் கஷ்டத்தை மற்றவர் தாங்காவிட்டால் இந்தப் பரந்த உலகத்தில் ஒருவர் கஷ்டத்தை மற்றவர்கள் எப்படித் தாங்க முடியும்?

இன்று சமுதாயம் மூன்று நிலைகளில் செயல்படுவதே இந்தப் பிரிவினை உணர்வுகளால்தான். மேல்நிலை, இடை நிலை, கடைநிலை. இந்த மூன்று நிலைகள் மாறிச் சமநிலை அடையும் முயற்சியில் வெற்றி பெற்றால் தவிர இந்த நாட்டுக்கு விமோசனம் இல்லை. இந்த வகுப்புப் பிரிவுகள் தான் குடும்பச் சிதைவுகளுக்குக் காரணம் ஆகின்றன. உரிமை வேண்டும்தான்; தனிமை வேண்டும்தான். ஆனால் முற்றிலும் அறுத்துக்கொண்டு போகின்ற அளவுக்கு இந்த வகுப்பு வேறு பாடுகள் நாட்டில் தோன்றிவிட்டன என்று என்னை எண்ணச் செய்தது.

உள்ளே சென்றவள் வர நேரம் பிடித்தது. நான் சும்மா இருந்தேன். அதனால்தான் இவ்வாறு எண்ண முடிந்தது. பின்னால் ஒரு ஜீப் வந்து நின்றது அது போலீசுகாரர்களுக்காகவே தயார் செய்யப்பட்டது என்பதைக் தெரிந்து கொண்டேன். அதில் "Police" என்று ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. ஒடமுடியாத நொண்டியைப் பிடிக்க ஒரு வண்டியா? அரசாங்கத்துக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். நாலு ஆட்கள்; ஒரு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டேபிள்கள், ஒரு மோப்பம் பிடிக்கும் நாய். இதைக் கண்டதும் அல்சேஷன் ஒய்வு எடுத்துக் கொண்டது. பின் வாங்கிவிட்டது. திருடு என்றாலே அவர்கள் நாயோடு வருவது வழக்கம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.

இவ்வளவு விரைவில் இவர்கள் எப்படி வந்தார்கள். எப்படி வரமுடியும்? ஏன் வரவேண்டும்? அவர்கள் வீட்டில் 'போன்' இருக்கிறது. அவர்கள் பேசினார்கள். அதனால் வர வேண்டி ஏற்பட்டது. என் கையில் நெக்லஸ் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/93&oldid=1153559" இருந்து மீள்விக்கப்பட்டது