பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104


வசதிகள் உடலுக்கு அசதிகளை மட்டுமே தந்தன: அல்ல! வருந்தி வாழ்கின்ற வாழ்க்கை முறையையும் சேர்த்துத் தந்திருக்கின்றன. அதற்கு விடிவு? இருக்கிறது.

உழைப்பு - உண்மையான உழைப்பு-

உழைப்புக்குப்பிறகு வரும் ஒய்வு நேரத்தையும் உல்லாசமாகக் கழிக்க வேண்டும். உடலுக்கு உழைப்பையும், மனதுக்குக் களிப்பையும் தருவது விளையாட்டல்லவா!

துன்பம் கலவாத இன்பம் அளிக்கும் விளையாட்டு தான், இன்றைய மனித சமுதாயத்திற்குத் தேவை என்பதை உலகத் தார் உணர்ந்து விட்டனர்.

அறிவார்ந்த, வசதிபடைத்த நாடுகள் அனைத்தும் விளையாட்டைக் கட்டாயமாக ஆக்கி, மக்களை ஈடுபட வைத்துக் கொண்டிருக்கின்றன. நோயில்லா மனிதர்கள் தான், நாட்டுக்குத் தேவை என்பதை வற்புறுத்தத் தொடங்கி விட்டன. ஆமாம்! காலம் மாறிக் கொண்டு வருகிறது.

'உடல் நலம் தான் உண்மையான பலம், பணம் நிலம் அல்ல' என்பதை உணர்ந்தவர்களே இன்று நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு மனிதனும் நாட்டின் ஓர் அங்கம் ஆவான், சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதுபோல, தனிப்பட்ட ஒவ்வொருவரும், சக்தியும் வலிமையும் உள்ளவராக இருந்தால் அவர் வாழும் சமுதாயம் சிறக்கும். அவர் வாழும் நாடு செழிக்கும்.

தனிப்பட்டவர் சிறக்கவும், சமுதாயம் செழிக்கவும், நாடு மேம்பாடடையவும் உதவுவது விளையாட்டுக்கள்தான். மனித குலத்திற்கு விளையாட்டுக்கள் தான் வழிகாட்டுகின்றன என்றால், அது உண்மையேயன்றி வேறல்ல. நாமும் நினைப்போம். இதன் வழி நடப்போம். பிறர் போற்ற சிறப்போம்.