பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7.நம்பிக்கை நட்சத்திரம்


இயக்கம் என்பது மனித உடலில் இயற்கையாக நடப்பது. அவரவர் தங்களை அறியாமலேயே அந்த இயக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். எதையும் எதிர்ப்பார்க்காமல் இயங்கும் உறுப்புக்களை தவிர்க்க முடியாது. அவை தன்னிச்சையானவை.

செயல் என்பது நினைத்து, திட்டமிட்டுத் தொடர்கின்ற இயக்கமாகும். அதுவும் பயன் கருதிச் செய்வனவாகும்.

செயல் என்றவுடன் கைதான் நமக்கு நினைவுக்கு வரும். அதனால்தான், உதவியிழந்த நிலைக்கு உதாரணம் கூறுகின்ற பொழுது கையிழந்தது போல் இருந்தது" என்று கூறுவார்கள்.

உடுப்புக்கு "உடுக்கை" என்பது ஒரு பெயர். உடுத்து தலுக்கு கை மிகவும் பயன்படுவதால் தான் உடு - கை என்றும் வந்திருக்கலாம்.

இதை வைத்துத்தான், உடுக்கை இழந்தவன் கை போல’என்று வள்ளுவரும் வலியுறுத்திப் பாடிச் சென்றிருக்கிறார் போலும்.

எண்ணத்தில் நினைவுகளின் எழுச்சி இருந்தாலும், திண்ணமாய் இருக்க வேண்டும் என்பதால் தான் 'நம்பு' என்றனர் முன்னோர்.