பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அர்த்த பஞ்சகம்


திரண்டாலும் அந்த மண்டபத்தின் ஒரு மூலைக்கே போதாது என்னும்படி விரிவானது அது; அந்த திருமாமணி மண்டபத்திலே அற்புதமான கோப்புடைய சீரிய சிங்காசனம் ஒன்றுண்டு. அதன்மேல் பன்னிரண்டு இதழ்களையுடைய, நானாசக்தி மயமான திவ்வியபொற்றாமரை ஒன்று அமைக்கப்பெற்றிருக்கும். அதன் பொகுட்டிலே (நடு இடத்திலே) விசித்திரமான அற்புத கட்டில் ஒன்றுண்டு. அந்த கட்டிலின்மேல் பல்லாயிரம் பனிமதிகளை உருக்கி வார்த்தாற் போன்ற குளிந்த புகரையுடைய திருமேனியினான அனந்தன் மெல்லணையாகச் செயற்பட்டு வருபவன்.

முடிவில்லாத அனந்த கல்யாண குணங்களைப் பெற்றுள்ளமையால் அவனை அனந்தன் என்று வழங்குவர். இறைவனுக்குத் தொண்டு புரிவதனாலும் - சேஷனாகி இருப்பதாலும்-சேஷன் என்ற பெயரையுடையவன். எம்பெருமான் உண்ட மிச்சிலை (சேஷப்பட்டப் பொருளை) உண்ணுதலால் சேஷன் என்ற திருநாமத்தைப் பெற்றுள்ள தாகவும் கொள்வர். இவன் எல்லாக் காலங்களிலும் எல்லா விதமான அடிமைகளையும் செய்வனாக இருப்பதைப் பொய்கையாழ்வார்;

சென்றால் குடைஆம்; இருந்தால் சிங்காசனம்ஆம்;
நின்றால் மாவடிஆம்: நீள்கடலுள் என்றும்
புணைஆம்; மனிவிளக்குஆம்; பூம்பட்டுஆம்; புல்கும்
அணைஆம் திருமாற்கு அரவு 6

என்ற பாசுரத்தால் விளக்குவர். எம்பெருமான் உலாவியருளும்போது மழை வெயில் படாதபடி குடையாகி வடிவெடுப்பான்; அவன் எழுந்தருளியிருக்கும் காலத்தில் திவ்விய சிம்மாசன வடிவமாகயிருப்பான், அவன் நின்று


6. முதல் திருவந். - 53