பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈசுவரனின் இயல்பு

21


வனாக நின்று சாத்திர முறைப்படி ஒழுகவேண்டிய தர்மோபதேசத்தையும் சுத்தவர்க்க சிருஷ்டியையும் செய்பவராக இருப்பார்.

அங்ருத்தனரானவர் சக்தி, தேஜஸ் என்ற இரண்டு குணங்களோடுகூடினவர். இவர் உலகப் பாதுகாப்பிற்கும்; உயிர்கள் ஈடேறுவதற்குத் தகுதியான தத்துவ ஞானங்களைக் கொடுத்தற்கும் காலப் படைப்பிற்கும், மிச்ரவர்க்க சிருஷ்டிக்கும் உரியவராக இருப்பார்.

வியூக வாசுதேவர், படைக்கப் பெற்ற சேதநர்களைக் காத்தற் பொருட்டு,தேவர் முனிவர்கட்கு ஆபத்து நேரிட்ட காலத்துச் சென்று அறிவிக்கலாம்படி அவதாரங்கட் கெல்லாம் நாற்றங்காலான திருப்பாற்கடலில் திருவனந் தாழ்வான்மீது உலகப் பாதுகாப்பில் சிந்தை செலுத்தி உறங்குவான்போல் யோகத்தில் ஆழ்ந்து கிடப்பார். இந்த வியூகாவதாரங்கள்பற்றிய விவரங்களை ஆழ்வார் பாசுரங்களில் காணலாம்; விரிவஞ்சி அவை காட்டப் பெறவில்லை.

கிளை வியூகங்கள் : மேற்கூறிய நான்கு வியூகங்களும் ஒவ்வொன்றும் மும்மூன்றாகப் பன்னிரண்டு கிளை வியூகங்களாகப் பிரியும். வியூக வாசுதேவனிடத்து கேசவன், நாராயணன், மாதவன் என்ற கினைகளும்: சங்கர்ஷணனிடமிருந்து கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன் என்ற கிளைகளும்; பிரத்தியும்நனிடத்து திரிவிக்கிரமன், வாமனன், சிரீதரன் என்பவைகளும், அநிருத்தனிடத்து இருடிகேசன், பதுமநாபன்: தாமோதரன் என்பவைகளும் தோன்றி அவ்வப் பெயர்களைப்பெறும்3. இவையாவும் பன்னிருதிங்களின் தலைவர்களாக இருக்கும். இவற்றின்


3. திருவாய் 2.7 (பன்னிரு திருநாமப் பாட்டு)