பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அர்த்த பஞ்சகம்


என்று பின்னும் பேசுவர்.

5. அர்ச்சாவதாரம் : அர்ச்சாவதாரம் என்பது, 'தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம்' (முதல். திருவந் 44) என்ற பொய்கையாழ்வார் பாசுரப்படி அன்பர்கள் எதைத் தனக்குத் திருமேனியாகக் கொள்ளுகின்றனரோ அதனையே இறைவன் தனக்கு வடிவமாகக் கொண்டுள்ள நிலையாகும். இந்நிலையில் இறைவன் இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னாரிடத்தில் தோன்றி சந்நிதி பண்ணி நீராட்டம், தளிகை, இருப்பு முதலிய எல்லாச் செயல்களையும் ஏற்றுக் கொண்டு திவ்விய தேசங்களிலும், அன்பர்களின் திருமாளிகைகளிலும் எழுந்தருளியிருப்பான் உலகியலில் மண்டியிருப்போருக்குத் தன் பக்கல் ருசி உண்டாக்குதலும், ருசி பிறந்த பிறகு தன்னைத் துதிப்பவர்களுடைய கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம் படி போக்கியத்திற்கு இடமாயிருத்தலும், தன்னை உபாய மாகப் பற்றும் அளவில் எல்லா உலகினரும் உபாயமாகப் பற்றுதற்குத் தகுதியாயிருத்தலும் பரமபதத்தில் போய் அநுபவிக்க வேண்டாமல்,

அண்டர்கோன் அணி அரங்கன்
என்அமுதினைக்
கண்டகண்கள் மற்றொன்றினைக்
காணாவே

- அமலனாதி-10

என்று திருப்பாணாழ்வார் அநுபவித்தவாறு அநுபவிக்கத் தக்கதாக இருத்தலும் இந்த அர்ச்சாவதாரத்தில்தான் முற்றுப் பெற்றிருக்கும்.

எல்லா ஆழ்வார்களும் இந்த அவதாரத்தில்தான் அதிகமாக ஈடுபட்டுப் பேசுவர். சுருங்கக் கூறினால் நாலாயிரத்தின் பாசுரங்கள் யாவும் இந்த அர்ச்சாவ தாரத்தைப் பற்றியனவே. திரு அரங்கத்தில் அழகிய