பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருந்தமிழ் அறநூல்கள்

5


பாகக் குறிப்பிடத்தக்கன் ஔவையார் அருளிய அரிய நீதி நூல்கள் ஆகும். அவை ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்பன. ஒளவையாரின் அறநூல்கள் சிற்றறிவுடைய சிறுவர்க்கும் சிறந்த உண்மைகளை விளக்குவன. ஒளவையாருக்கும் பிற்பட்ட காலத்தில் சில அறநூல்கள் தோன்றியுள்ளன. அதிவீரராம பாண்டியன் என்னும் சிற்றரசன் ‘வெற்றி வேற்கை’ என்னும் அறநூலைப் பாடியுள்ளான். முருகன் அருள் பெற்ற முத்தமிழ்க் கவிஞராகிய குமரகுருபரர் ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் அரிய நீதிநூலை ஆக்கியுள்ளார். அந்நூல் ‘குட்டித் திருக்குறள்’ என்று கொண்டாடப்படும்.

தவமுனிவர் தந்த நூல்கள்

தவச் செல்வர் ஆகிய சிவப்பிரகாசர் ‘நன்னெறி’ என்னும் சின்னூல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்நூல் எளிய இனிய உவமைகளால் அரிய கருத்துக்களை மக்களுக்கு விளக்கும் மாண்புடையது. சிவப்பிரகாசருக்குப் பின்னர் நெல்லை நாட்டில் தோன்றிய சிவஞான முனிவர் ‘சோமேசர் முதுமொழி வெண்பா’ என்னும் இனிய நூல் ஒன்றை அருளியுள்ளார். இது வரலாறுகளின் வாயி-