பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அறநூல் தந்த அறிவாளர்


களாய்ச் சிறந்து விளங்கினர். அதனால் பாண்டியன் அவையினை அணி செய்யும் புலவர்களாய்த் திகழ்ந்தனர். அரிய தமிழ் நூல்கள் பலவற்றை ஆக்கித் தமிழ்த்தாயை அலங்கரித்தனர். அவர்கள் தமிழுக்கு அருந்தொண்டு புரிந்தனர்.

சமணரின் தமிழ்த்தொண்டு

இத்தகைய சமண முனிவர்களின் தொண்டால் விளைந்த பயனே நாலடியார் என்னும் நல்லற நூலாகும். இந்நூல் தோன்றியது குறித்து வரலாறு ஒன்று வழங்குகின்றது. பஞ்சத்தால் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த சமண முனிவர்கள் வட நாடு மழை பொழிந்து வளம் பெற்ற செய்தியைத் தெரிந்தனர். தங்கள் நாட்டிற்குச் செல்ல விரும்பிப் பாண்டிய மன்னனிடம் விடை வேண்டினர். கற்றவர்களும் நற்றவர்களும் ஆகிய அச்சமணப் பெரியார்களை மன்னன் பிரிவதற்கு மனம் வருந்தினான். பல ஆண்டுகளாகத் தனது அரசவையில் புலவர்களாக வீற்றிருந்த அம்முனிவர்களின் பிரிவு அரசனுக்குப் பெருங்கவலை அளித்தது.

‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்’