பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அறநூல் தந்த அறிவாளர்


தம்மைக் ‘கொற்கையாளி குலசேகரன்’ என்று கூறிக் கொள்கிறார். அதனால் இவர் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவர் என்பது புலனாகும்.

அசரும் ஆசிரியரும்

இவ்வரசர் நிரம்ப வழகிய தேசிகர் என்னும் தமிழ்ப் புல்வரிடம் தமிழ் நூல்களைப் பயின்றார். தேசிகர், இவரது அரசவைப் புலவராகவும் விளங்கினார். அவர் மிகவும் கருமையான திருமேனி உடையவர். ஆதலின், அதிவீராமர் ஒருநாள் தம் ஆசிரியரிடம் நீர் அண்டங் காக்கைக்குப் பிறந்தவரோ? என்று நகைச்சுவையாகக் கேட்டார். அது கேட்ட தேசிகர், ‘அரசே! தாங்கள் அன்றோ அண்டங் காக்கைக்குப் பிறந்தவர்? அவ்வாறு இருக்கப் புலவனாகிய என்னை அண்டங் காக்கைக்குப் பிறந்தவன் என்பது பொருந்துமோ?’ என்றார். அண்டங் காக்கை என்ற தொடர் ‘உலகைக் காத்தல்’ என்றும் பொருள் படும். உலகைக் காத்தற்குப் பிறந்தவர் அரசர் என்ற பொருள் தோன்றுமாறு கூறி, மன்னரை மகிழ்வித்தார். புலவரின் நுண்ணறிவைக் கண்ட மன்னர் அவருக்குப் பல பரிசுகளை வழங்கினார்.