பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநெறி அருளிய குருபரர்

71


அடைக்கலமாகச் சேர்த்தனர். திருக்கோவிலில் உள்ள சண்முக விலாச மண்டபத்தில் தங்கினர். நாள்தோறும் கடலில் நீராடிப் பெரு மானை வழிபட்டு உண்ணா நோன்பினை மேற்கொண்டிருந்தனர். அங்ஙனம் நாற்பத்தொருநாள் அப்பெற்றோர் பாடு கிடந்தனர். அதன் பயனாகக் குழந்தை வாய் திறந்து பேசத் தொடங்கியது. முருகப்பெருமானே அப்பிள்ளையைத் தட்டி எழுப்பிக் “குமரகுருபரா!” என்று வாய் குளிர அழைத்தார். ‘நின் வாக்கிற்குத் தடை ஏற்படும் இடத்தில் நினக்குப் பரஞானம் கிடைக்கும்’ என்று சொல்லி அம் முருகப்பெருமானார் மறைந்தார். அவ்வோசை கேட்டு எழுந்த பிள்ளை, தன் பெற்றோரைத் தட்டி எழுப்பி அம்மா! அப்பா! என்று பெற்றோர் உளங்குளிர அழைத்தது. ‘கடலில் ஆடிக் கந்தனை வழிபடுவோம்! வாருங்கள்! வாருங்கள்!’ என்று வாய்திறந்து பேசியது. அதனைக் கண்டு வியப்படைந்து அளவில்லாத இன்ப வெள்ளத்தில் பெற்றோர் மூழ்கினர். முருகப்பெருமான் திருவருளை நினைந்து நினைந்து உள்ளம் உருகினர். அப்பெருமானை வழிபடுதற்குப் பிள்ளையுடன் புறப்பட்டனர். கடலில் நீராடி விசுவரூப தரிசனம் செய்தனர்.