பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னெறி காட்டிய நற்றவர்

85


தரிசிக்கப் புறப்பட்டனர். அவர் எழுந்தருளும் பொம்மபுரத்தை அடைந்தனர். அவரை வணங்கி அவரது அருளைப் பெற்றனர். சிவப்பிரகாசர், பாலையரைத் தம் ஞானதேசிகராகக் கொண்டு போற்றினர். அவர்மீது பிள்ளைத் தமிழ், பள்ளியெழுச்சி, கலம்பகம் முதலான நூல்களைப் பாடினர்.

மணலில் எழுதிய தமிழ் நூல்

பொம்மபுரம், கடற்கரையில் அமைந்த சிற்றூர். சிவப்பிரகாசர் அங்குத் தங்கியிருந்த காலத்தில் நாள்தோறும் மாலையில் கடற்கரைக்குச் செல்வார். அங்குள்ள மணல் வெளியில் அமர்ந்து இயற்கைக் காட்சிகளைக்கண்டு இன்புறுவார். ஒருநாள் அவர் மணலின்மேல் இருக்கும்போது அவர் உள்ளத்தில் பல கருத்துக்கள் உதித்தன. அவைகள் வெண்பாக்களாக வெளிவந்தன. நாற்பது வெண்பாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தன. சிவப்பிரகாசரிடம் அப்போது ஏடோ எழுத்தாணியோ கையில் இல்லை. அப்பாட்டுக்களை விரைவாக மணல் மேட்டிலேயே எழுதினார். இருள் வந்ததும் திருமடத்தை அடைந்தார். மறுநாள் பொழுது விடிந்ததும் தம் மாணவர் ஒருவரை அனுப்பி, அப்பாட்டுக்களை ஏட்டில் எழுதி வருமாறு கட்டளையிட்டார்.