உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறநெறி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அறநெறி

இருந்த முத்துப்பரல் இட்ட பொற்சிலம்பு ஒலிக்கச் செவிலியர் கையில் பிடிபடாது அவள் தத்தித் தத்தி நடந்து நெளிந்து ஒடிய பெண் அவள். அன்புள்ளம் கொண்ட செவிலியர் இவளுக்குப் பாலை ஊட்ட முடியவில்லையே என்று பரிதவித்து நின்ற காட்சி, இவள் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. ஆனால் அந்தக் காலம் கழிந்துஒழிந்தது. இப்பொழுதோ மாறுபட்ட காட்சி அவளுடைய வாழ்வில் அரங்கேறுகின்றது. உண்ண உணவு இன்றி அவள் வாழ்க்கையில் அவலம் வந்து சேருகின்றது. அந்தப் பெண்ணின் தந்தை தன்னுடைய மகள் தன் வீட்டில் வாழ்ந்த பெருவாழ்வினை எண்ணிப் பார்த்து நெடுமூச்செறிகிறார் என் மகள் தன் வீட்டில் வாழ்ந்தபொழுது என்னென்ன உணவினை விரும்பி மகிழ்ந்து சுவைத்தாளோ அத்தகைய உணவு வகைகளைப் பக்குவத்தோடு சமைத்து, அதை ஒரு தூக்கில் போட்டு அவள் புகுந்த வீட்டிற்குத் தக்கவர் வழிக் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் அவருடைய மகளோ இன்று வேறொருவர் வீட்டில் மருமகளாக வாழ்ந்து வருகின்றாள். எனவே தன் தந்தை கொடுத்து அனுப்பிய அந்த கொழுவிய-இனிய சோற்றினை அவள் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. அவ் உணவு வகைகளை அவள் நெஞ்சாலும் நினைக்கவில்லை. அந்த வகையில் அவள் வாழ்கின்றாள். நீர் செல்லும் போக்கில் வளைந்து வளைந்து உருவாகிக் கிடக்கும் கருமணலைப்போல, வேளைதோறும் உண்பதையும் கைவிட்டு மறந்து, தன் புகுந்த வீட்டின் பொருள் நிலைக்கேற்பத் தன்னைச் சரிசெய்துகொண்டு விளங்குகின்றாள். ஒரு பொழுது உணவைத் துறந்து அதற்கு அடுத்த பொழுது ஏதோ சிறிது உண்டு வாழும் வன்னெஞ்ச வாழ்க்கையை-உறுதிமாறாத வாழ்க்கையைக் கொண்டவளாக அவள் விளங்குகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/96&oldid=587005" இலிருந்து மீள்விக்கப்பட்டது