பக்கம்:அறப்போர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


செய்யாமல், இனிச் சாமர்த்தியமாக இவற்றைப் பாதுகாத்து வாழ்வோம் என்றெண்ணணாமல், (நான் கொடுக்கிறேன்); நீயும் எல்லோருக்கும் கொடுப்பாயாக.

நயந்து-விரும்பி. உறைநர் . தங்குவோர். பன்மாண் - பல மாட்சியையுடைய. கிளை - சுற்றத்தார். கடும்பு-சுற்றம். யாழ: அசை நிலை,. குறி எதிர்ப்பை - அளவு குறித்து வாங்கிப் பின் கொடுக்கும் பண்டம்; 'குறி எதிர்ப்பையாவது அளவு குறித்துவாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது’ என்று பரிமேலழகர் (குறள், 221) எழுதுவார். நல்கியோர்- வழங்கியவர்கள். சூழாது - ஆராயாமல். வல்லாங்கு-சாமர்த்தியமாக. கொடுமதி - கொடு. மனைகிழவோயே-வீட்டுக்குத் தலைவியே. தூங்கும் -தொங்கும். கிழவன்-உரியவன். திருந்து வேல்-இலக்கணங்கள் அமைந்த வேல். வளன் - செல்வம்.

பன்மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் என்பதற்கு, 'பல குணங்களும் மாட்சிமைப்பட்ட கற்பினையுடைய நினது சுற்றத்து மூத்த மகளிர்க்கும்’ என உரை எழுதினார் பழைய உரையாசிரியர். நீயும் என்ற உம்மை, யானும் கொடுப்பேன்; நீயும் கொடு என எச்ச உம்மையாய் நின்றது எனபது அவர் எழுதிய விசேட உரை.

இதைக் கேட்ட குமணன் செல்வத்தை இயல்பாகப் படைத்த தன் வண்மையைக் காட்டிலும், புலவருடைய வள்ளன்மை சிறந்தது என்று உணர்ந்து, வியந்து பாராட்டுவதுதானே இயல்பு?

இது பாடாண் திணையில் பரிசில் என்னும் துறை. புலவர் தாம் பெற்ற பரிசிலைப் பற்றிச் சொல்வதனால் இத் துறையாயிற்று. இது புறநானூற்றில் 163-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/138&oldid=1460098" இலிருந்து மீள்விக்கப்பட்டது