பக்கம்:அறப்போர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெற்ற பரிசில்


குறிப்பிடுகிறார். குரல் புணர்தல் சுருதியின் அமைதியைக் காட்டுகிறது. சீர் என்பது தாளத்தைக் காட்டுகிறது. எனவே சுருதியும் லயமும் அமைந்த பாட்டு அது என்று தெரிகிறது. கொளை-பாட்டு. பாண் மகன்-பாணன்; பழங்காலத்தில் யாழை வாசிக்கும் தொழிலையுடைய சாதியிற் பிறந்தோன். என ஆங்கு: அசை நிலைகள். அழல்-நெருப்பு. புரிந்த-செய்யப் பெற்ற, அழல்புரிந்த என்றதனாலும் வெள்ளி நார் என்றதனாலும் இங்கே சொன்ன தாமரைப் பூவானது பொன்னலாகியது என்று கொள்ளவேண்டும். பாணர்களுக்குப் பொற் பூத்தருவது பழங்கால வழக்கம்.

இந்தப் பாட்டுப் பாடாண் திணையைச் சார்ந்தது. ஒருவருடைய புகழைப் பாராட்டிக்கூறும் பலவகைத் துறைகள் அடங்கியது அத்திணை. இது அந்தத் திணையில் பரிசில் கடாநிலை என்னும் துறையைச் சார்ந்தது. பரிசில் வேண்டுமென்று கேட்கும் நிலை என்பது அத்துறைக்குப் பொருள். ‘பாடினி இழையும், பாணன் பொற்பூவும் பெற்றான். நான் ஒன்றும் பெறவில்லை’ என்பதைக் குறிப்பித்து, மறைமுகமாகத் தமக்குப் பரிசு வேண்டுமென்பதைப் புலப்படுத்தியமையின் இது பரிசில் கடாநிலை ஆயிற்று.

இந்தப் பாடலைக் கேட்ட சேரமான் இளவெயினியாருக்குப் பரிசில் பல தந்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/73&oldid=1267443" இலிருந்து மீள்விக்கப்பட்டது