பக்கம்:அறப்போர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.






முகவுரை


இவற்றையன்றிப் பழங்காலத்துத் தமிழ் நாட்டின் அரசியல், தமிழ் மக்களின் வாழ்வியல், கலைநிலை, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் பொருள்களோடு தொடர்புடைய செய்திகள், அக்காலத்து மக்கள் கொண்டிருந்த எண்ணங்கள் முதலிய பலவற்றையும் இந்நூற் பாடல்கள் தெரிவிக்கின்றன. அவற்றைக் கொண்டு பண்டைத் தமிழர் நாகரிகத்தின் பல துறைகளைத் தெளிந்து உருவாக்க முடிகிறது.

ந்தப் புத்தகத்தில் புறநானூற்றிலுள்ள ஏழு பாடல்களுக்குரிய விளக்கத்தைக் காணலாம். பாடல்கள் நிகழ்ச்சிகளை நிலைக்களமாக உடையவை. ஆதலால் இந்த விளக்கங்கள் யாவும் கதைப் போக்கிலே அமைந்திருக்கின்றன. உண்மையில் புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களும் நானுாறு சிறு கதைகளாக எழுதுவதற்குரிய கருவை உடையவை. அத்தகைய கதைகளை முன்பு என் ஆசிரியப் பிரானகிய மகா மகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் எழுதியிருக்கிறர்கள். அவர்கள் திருவடிபற்றி நிற்கும் எளியேனும் அவ்வகையில் சில கதைகள் எழுதியிருக்கிறேன். [1]

இப் புத்தகத்தில் உள்ள முதல் கட்டுரை புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடல் பற்றியது. சிவபெருமானைப் பற்றிய செய்திகளைப் பெருந்தேவனார் அதில் சொல்கிறார். அப் பெருமானுடைய கொன்றைக் கண்ணியையும் கொன்றைத் தாரையும், இடப ஊர்தியையும் இடபக்கொடியையும், நீல கண்டத்தையும், மாதிருக்கும் பாதியையும், கங்கைத் திருமுடியையும், திருமுடிப் பிறையையும், தாழ்ந்த சடையையும், தவக் கோலத்தையும் காட்டுகிறார். நீலகண்டத்தின் பெருமையை மறை நவில் அந்தணர் நுவல்கின்றனர் என்றும், திருமுடிப் பிறையைப் பதினெண்கணங்களும் ஏத்துகின்றன என்றும், சிவமும் சக்தியும் ஒன்றாகி நிற்பதும் உண்டு என்றும் சொல்கிறார்.


  1. எல்லாம் தமிழ், புது மெருகு என்ற புத்தகங்களைக் காண்க.

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/9&oldid=1265815" இலிருந்து மீள்விக்கப்பட்டது