பக்கம்:அறவோர் மு. வ.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

அறவோர் மு. வ.

தென்னை மரமே கேளாய்!
   தென்னை மரமே கேளாய்!
உன்னை வளர்த்தவர் அப்பா
   என்னை வளர்த்தவர் அம்மா!
உனக்கும் வயது ஆறே:
   எனக்கும் வயது ஆறே;
நீ வளர்ந்த உயரம்
   நான் வளரவில்லை!
நீ கொடுப்பாய் இளநீர்
   நான் கொடுப்ப தென்ன?
ஆனாலும் என்னை அன்பாய்
  அன்னை வளர்த்தலைப் பாராய்!

அரியவற்றையெல்லாம் எளிதில் விளக்கும் அரிய திறம் பெற்றவர் பெருந்தகை மு. வ. ஆவர். நுணுக்கமாக மொழிநூற் கருத்துகளையும் எவரும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அவர் எழுதியிருப்பதைக் காணலாம்.

“கோழி பேசுகிறது. கோழியாவது பேசுவதாவது? இது என்ன கதையா என்று எண்ணத் தோன்றும். ஆனால் நன்றாக எண்ணிப் பார்த்தால் தாய்க்கோழி தன் குஞ்சுகளோடு இருக்கும் போது எந்நேரமும் பேசிக் கொண்டே இருப்பது உண்மை என்று தெரியும். அது ஒரு பேச்சா, கிக் கிக்கிக் என்ற ஒலிதானே என்று எண்ணலாம். நமக்கு விளங்காத காரணத்தால் அது பேச்சு அன்று என்று தள்ளிவிடக் கூடாது. சீனாக்காரன் பேசுவது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதனால் அது பேச்சு அன்று என்று தள்ள முடியுமா? அப்படித் தான் கோழிப் பேச்சும். அதன் பேச்சு நமக்கு விளங்கவில்லை. ஆனால், அதன் இளங்குஞ்சுகளுக்கு நன்றாக விளங்குகிறதே. அவைகள் தாய் சொல்வதைக் கேட்டு அதன்படி நடப்பதைக் காணலாம். ஆகையால் அது பேச்சுத்தான்.”

- இது மொழியின் கதை என்கிறார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/127&oldid=1238993" இலிருந்து மீள்விக்கப்பட்டது