பக்கம்:அறவோர் மு. வ.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

அறவோர் மு.வ.

துறையின் உயர் பட்டங்களைப் பெறச் செய்ததும் ஓர் உயரிய சாதனையாகும்.

மு. வ. அவர்கள் நூல் வெளியீட்டுத் துறையில் செய்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பது ஈண்டு நினைவுகூரத் தக்க செய்தியாகும். அவர் எழுதிய திருக்குறள் தெளிவுரை பல இலட்சம் படிகள் இதுகாறும் விற்பனையாகியுள்ளது என்பது நூல் வெளியீட்டுலகில் நிலைத்த சாதனையாகும்.

இவர் எழுதிய கள்ளோ காவியமோ எனும் நாவல், புதுவதாகத் திருமணம் மேற்கொண்டு வாழும் பலருக்கு வழிகாட்டும் தகுதி படைத்த தனிநூலாய்த் திகழ்கின்றது. இந்நூல் படித்ததால் எங்கள் வாழ்வு பூசலும் சிறுசிறு சச்சரவுமின்றி அமைதியாகச் செல்கிறது என்று இவருக்கு வந்திருந்த கடிதங்கள் மிகப் பலவாகும். இவர் எழுதிய :கி. பி. 2000 என்னும் கற்பனை நூலினைப் பலரும் பாராட்டுவர். அறமும் அரசியலும் நாட்டுத் தலைவர் பலரால் வரவேற்கப்பட்ட நல்லதொரு கட்டுரை நூலாகும்.

இவருடைய நூல்களில் 'தங்கைக்கு’ என்னும் கடித இலக்கியம் முடி மணியானது என மொழியலாம். என் பேராசிரிய அனுபவத்தில் திருமணப் பரிசிற்கெனத் திரு. வி. க. எழுதிய "பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்”, பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு , மு. வ. எழுதிய தங்கைக்கு ஆகிய மூன்று நூல்களையே பரிந்துரை செய்வது வழக்கம். தாம் எழுதிய நூல்கள் சிலவற்றைத் திரு. வி. க கல்வி அறத்திற்கென ஒதுக்கிய உயர் பண்பாடும் இவரிடத்துண்டு.

ஆனந்த விகடன் அதிபர் அமரர் எஸ். எஸ். வாசன் அவர்கட்கும் மு. வ. அவர்கட்கும் அறிமுகம் அவ்வளவாக இல்லாதிருந்த காலம். சிலம்புச்செல்வர் ம. பொ. சி. அவர்கட்குப் பொன்விழா ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் வாசன் அவர்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/133&oldid=1224207" இலிருந்து மீள்விக்கப்பட்டது