பக்கம்:அறவோர் மு. வ.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

அறவோர் மு. வ.

திரு. வி. க. அவர்களிடத்தில் இவர்கள் கொண்டிருந்த தொடர்பின் சிறப்பு எழுதிக் காட்ட இயலாதது. இவர் வாழ்வில் தோய்ந்து நின்றிலங்கிய பெரியார் அவரே. மு. வ. அவர்களிடத்தில் திரு. வி. க. அவர்கட்குப் பெருமதிப்பு உண்டு. இதனை அவர்தம் 'வாழ்க்கைக் குறிப்பில்’ காணலாம். 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ என்னும் மு. வ. வின் நூலிற்குத் திரு. வி. க. அணிந்துரை தந்துள்ளார். நூலின் முன்பக்கத்திலேயே திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் (திரு. வி. க. அணிந்துரையுடன்) என்று இருக்கக் காணலாம். அணிந்துரையில் மு. வ. அவர்களைப் பலபடப் பாராட்டியெழுதியிருந்தார் திரு. வி. க. அவற்றில் பல பகுதிகளை நீக்கிவிட்டு ஒரு சில: பகுதிகளையே அச்சிட்டார் மு. வ.



புகழ்ச்சி வேண்டாதவர் மு. வ. திருக்குறளில் வரும் புகழ் என்ற அதிகாரத்தைத் திருவள்ளுவர் இன்று வாழ்ந்திருந்தால் எழுதியிருக்கமாட்டார் என்பார். அமெரிக்காவில் ஊஸ்டர் கல்லூரியில் தாம் கெளரவ டாக்டர் 'டி. லிட்.' பட்டம் பெற்றதனை அவருடன் நெருங்கியிருந்த ஒரு சிலரே அறிவர். புகழ்ச்சி ஒரு சில சமயங்களில் பகைமையினையும் சிலவிடங்களில் வளர்த்து விடும் என்று நம்பினார் இவர்.



இயற்கை மருத்துவ முறையினைத் தேர்ந்து, நலிவுற்றிருந்த தம் உடம்பை மாற்றி நலமடைந்தார். தாமே முயன்று படித்து 1934 ஆம் ஆண்டில் 'வித்துவான் - பிரிலிமினரி' தமிழ்த்தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தாம் படித்த திருப்பத்துார் உயர்பள்ளியில் தம் தமிழாசிரியர் முருகைய முதலியார் ஒய்வு பெற்ற பின் அவ்விடத்தில் தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார். 'ஆப்காரி குமாஸ்தா'வாக இருந்தபொழுது இலஞ்சம் வாங்காமல் நேர்மையாகத் தம் கடமையைச் செவ்வனே ஆற்றிய திறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/141&oldid=1239005" இலிருந்து மீள்விக்கப்பட்டது