பக்கம்:அறவோர் மு. வ.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

அறவோர் மு. வ.

திருநாவுக்கரசர் பெருமானிடத்தும் அவர்தம் தேவாரப் பாடல்களிடத்தும் அப்பா (இனி நான் இவ்வாறே குறிப்பிடுவேன்; நெருங்கிய மாணவர் பலரும் அவ்வாறே இவர்களை நினைத்து அழைப்பது, எழுதுவது வழக்கம்) அவர்கட்குப் பெரிதும் ஈடுபாடு உண்டு. அதனால் 1936-ல் பிறந்த தம் குழந்தைக்குத் திருநாவுக்கரசு என்று பெயரிட்டு 'அரசு’ என்று அன்போடு அழைத்தார். சங்க இலக்கியத்தில் அகப்பொருள் பாடல்களுக்கு அரிய விளக்கங்களை அள்ளி அள்ளி வழங்கும் அவர்கள் 1943 ஆம் ஆண்டு பிறந்த தம் இரண்டாவது மகனுக்கு 'நம்பி' என்று பெயர் வைத்தார். கடைசிப் பிள்ளைக்குப் (1949-ல் பிறந்தவர்) "பாரி” என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.



1939 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகச் சேர்ந்தார். B. O. L. முதல் வகுப்பில் தேறியிருந்த இவருக்கு அப்பணியினைத் தந்தவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புமிக்க முன்னாள் துணைவேந்தர் டாக்டர் இலட்சுமணசுவாமி அவர்கள் ஆவர். கல்வித்துறையில் இவர் மேன்மேலும் உயர அப் பெரியாரே ஊக்கமும் ஆக்கமும் தொடர்ந்து தந்தார். அவரைப் பல சமயங்களிலும் நன்றியோடு நினைத்து நெகிழ்ந்து அப்பா பேச நான் கேட்டிருக்கிறேன்.




'வினைச் சொற்களை' (Origin and development of verbs in Tamil)1944 ஆம் ஆண்டில் M. O. L. பட்டமும் 'பழந்தமிழ் இலக்கியங்களில் இயற்கை' (The treatment of Nature in Ancient Tamil Literature) என்ற பொருள் குறித்து ஆராய்ந்து 1948 ஆம் ஆண்டில் 'டாக்டர்’ பட்டமும் பெற்றார்கள். தமிழ்த்துறையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் 'டாக்டர்' பட்டம் பெற்ற பெருந்தகை இவரேயாவர்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/143&oldid=1239007" இலிருந்து மீள்விக்கப்பட்டது