பக்கம்:அறவோர் மு. வ.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

அறவோர் மு. வ.

வேண்டுமே என்று கவலைப்படாமல் கல்வியைக் கவனி; வாய்ப்பு நேருமானால் திருப்பிக்கொடு; இன்றேல் அது குறித்துக் கவலைப்படாதே” என்பார். தேர்வுப் பணம் கட்ட முடியாத மாணவர்க்குத் தேர்வுப் பணம் கட்டுவார். நெடுந்தொலைவிலிருந்து கல்லூரிக்கு வரச் சைக்கிள் வசதி வேண்டும் எனும் நிலையுள்ள மாணவர்க்குச் 'சைக்கிள்' வாங்கித் தந்துள்ளார். இன்னும் இவ்வாறே பலப்பல கொடைகள். 'வலக்கை தருவது இடக்கைக்குத் தெரியக் கூடாது’ எனும் சொல்லிற்கு இயைய, விளம்பரம் இன்றி உதவி செய்வார். அப்பா அவர்கள் வீடு மாணவர் பலருக்கு உணவுச்சாலையாக இருந்தது; பள்ளியறை (இரு பொருளிலும் பயிலுமிடம் - உறங்குமிடம்)யாக இருந்தது. அன்பிற்குரிய அம்மா அவர்கள் இன்முகத் தோடு விருந்து படைப்பார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும். மாணவர்களும் அங்கு உண்டு. இயல்பிலேயே முரட்டுத் தன்மை வாய்ந்த பலரும் அங்குப் பக்குவம் பெற்று இன்று பண்பாட்டின் பாதுகாவலர்களாக ஒளிவிட்டு நிற்கிறார்கள்.



அப்பா அவர்கள் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் படுக்கையைவிட்டு எழுந்து விடுவார்கள். வேப்பங்குச்சியை (பின்னாளில் பிரஷ்) எடுத்து வாயில் வைத்துக் கொண்டு தோட்டமெல்லாம் உலாவிச் செடி கொடிகளைப் பார்த்து வருவார்கள். காலைக்கடன் முடித்துச் சிறிது நேரம் தியானத்தில் - வழிபாட்டில் நிற்பார்கள். இராம கிருட்டிணரும், விவேகானந்தரும், அன்னை சாரதா தேவியும் இவர்கள் நினைவில் நிற்பர். திருநாவுக்கரசர் திருத்தாண்டகப் பாடல்களும், நம்மாழ்வாரின் அகப்பொருட்பாடல்களும், தாயுமான தயாபரரின் பராபரக் கண்ணி, கிளிக்கண்ணிப் பாடல்களும், இராமலிங்க வள்ளலாரின் அருட்பாக்களும், இராமதீர்த்தரின் மணி மொழிகளும் இவர் வழிபாட்டிற்குரிய பாடல்களாகும்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/145&oldid=1244207" இலிருந்து மீள்விக்கப்பட்டது