பக்கம்:அறவோர் மு. வ.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

157

நன்மைக்கே என்று எண்ணுகிறேன். அறிஞர் எச். ஜி. வெல்ஸ் வாழ்க்கையில் ஒரு குறிப்பு-அவரே எழுதிய குறிப்பு-ஒன்று என் நினைவுக்கு வருகிறது. அவருடைய இரண்டாம் மனைவி ஒருமுறை வாழ்க்கையில் மிகச் சலித்தபோது, கணவருக்குச் சொல்லி அனுமதி பெற்றுத் தனியே பிரிந்து சில வாரங்கள் வாழ்ந்தாராம். அப்போது சென்று தங்கியிருந்த இடத்தையும் கணவருக்குத் தெரிவிக்கவில்லையாம்”,26 என்று ஓர் அருமையான வாழ்வியல் நடப்பு உண்மையினைக் குறிப்பிட்டு, ’அன்போடு கடமையைச் செய்தல் முதலில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மனத்தின் பேயாட்டத்திற்கு இடம் இருக்காது. தவற வாய்ப்பு நேராது; நேர்ந்தாலும் விழிப்போடு தற்காப்புத் தேடிக் கொள்ளலாம்”,27 என்று கூறி, அன்பும் கடமையுணர்வும் வாழ்விற்குத் தேவை என வற்புறுத்துகின்றார்.

அறிவுரைகள்

வாழ்க்கை வெற்றி பெறுவதற்குக் கீழ்க்காணும் அறிவுரைகளை நூற்கண் ஆங்காங்கே பொதிந்து தந்துள்ளதனைக் காணலாம்:

”திருவள்ளுவரின் அறத்துப்பால் நெறி - அதாவது, காந்தியடிகளின் எளிய தூய நெறி; இதை நம்பினால் எவ்வளவோ தொல்லைகளை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம். தனி வாழ்க்கையைப் பொறுத்தமட்டில்தான் இதைச் சொல்கிறேன். நெறியை முழுவதுமாக நம்பாவிட்டாலும், ஆடம்பரமற்ற ஆணவமற்ற அமைதியான வாழ்க்கை நல்லது என்பதையாவது நம்புவார்களானால் போதும். ஆடம்பரம், ஆணவம், ஆரவாரம், இவைதான் இந்தக் காலத்து நாகரிகத்தின் உயிர் நாடிகள், தனி வாழ்க்கையில் மனம் பண்படுவதற்கு இவைகள் தடைகள் என்பது என் கருத்து.'’28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/160&oldid=1462066" இலிருந்து மீள்விக்கப்பட்டது