பக்கம்:அறவோர் மு. வ.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

அறவோர் மு. வ.


"தனக்கென்று மிகுதியாகப் புகழ் தேடிக் கொள்வது பொல்லாத தன்னலம்; தன்மானத்தைப் பெரிதாக எண்ணுதல் அதைவிடக் கொடிய தன்னலம். கணவன் மனைவி என்று இருவர் சேர்ந்து வாழத் தொடங்கிய பிறகு, தனியே புகழ் தேடுவதும் தனியே மானம் போற்றுவதும் தவறானவை."29

"கணவன் புகழைக் கண்டு மகிழும் மனம் இல்லாத மனைவி, மனைவியின் மானத்தைத் தன் மானமாகக் கருதாத கணவன் - இவர்கள் சேர்ந்து வாழத் தகுதி உடையவர்களா? உடம்பு, பணம் இவற்றில் சுற்றத்தாரும் அயலாரும் தலையிடுவது குறைவு. ஆனால் புகழ் மானம் ஆகிய துறைகளில் எல்லாரும் (தாய்வீட்டார், மாமி வீட்டார், நண்பர்கள் உட்பட எல்லாரும்) தலையிட்டு அவரவர்கள் பங்குக்குத் தூபம் போட்டு இல்வாழ்க்கைக்குத் தீமை செய்வதை நீ எங்கும் பார்க்கலாம். இந்தத் தொல்லைகள் இல்லாமல் அமைதியாக வாழ வழி சொல்லட்டுமா? புகழ் மானம் ஆகியவற்றையும் ஆடம்பரப் பொருள்களாகக் கருதி ஒதுக்கி எளிய வாழ்க்கையை நாடு. ஒழியட்டும் அந்த மயக்க உணர்ச்சிகள்!" 30

எளிய வாழ்வின் ஏற்றம்

"எளிய வாழ்க்கை வாழ்வது சிறந்த அறம்"31 என்றும் , "பாவங்களில் பெரிய பாவம், குற்றங்களில் முதல் குற்றம் ஆடம்பர வாழ்க்கைதான்"32 என்றும் குறிப்பிடுகின்றார். "விபசாரம் கொள்ளை கொலையினும் ஆடம்பர வாழ்க்கை தீதென்பதனைக் காட்ட, விபசாரம் கொள்ளை கொலை முதலியன ஒரு சிலரைத்தான் அழிக்கின்றன. ஆனால் ஒரு சிலருடைய ஆடம்பர வாழ்க்கை எத்தனையோ ஏழை மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாழ்படுத்தி அல்லல் விளைக்கின்றது"33 என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/161&oldid=1224286" இலிருந்து மீள்விக்கப்பட்டது