பக்கம்:அறவோர் மு. வ.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

அறவோர் மு. வ.

★ சிலர் பிறர்க்கு வரும் துன்பத்தைக் காணும்போது மெழுகுபோல் உருகி அழிகிறார்கள். சிலர் யாருடைய துன்பத்திற்கும் இரங்காமல் கல்போல் இருக்கிறார்கள். இருவகையாரும் வாழத் தகுந்தவர்கள் அல்ல. மெழுகு உருகி அழியும்; கல் உருகவே உருகாது. இரண்டும் பயன் இல்லை. உருகவும் வேண்டும். அழியாமல் உருப்படவும் வேண்டும். இரண்டு தன்மையும் உள்ள இரும்பு பொன் முதலியவைகளே பயன் மிகுந்தவை. இரும்பும் பொன்னும் போல் இருப்பவர்களே வாழ்க்கைக்குப் பயன்படுவார்கள்.

★ தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது என்றைக்கும் நல்லது. அதுவே முதன்மையான தவம். கவலை இல்லாமல் வாழ்வதற்கு அது ஒரு வழி. தேவையே இல்லாமல் மனிதன் வாழ முடியாது. தேவைகளைக் குறைத்து வாழலாம்.

★ பணம் என்றால் அதற்கு ஒரு தனி மதிப்பு. உலகத்தில் உள்ள வரையில், அதைச் சும்மா விடக்கூடாது. விட்டால், புத்தர், ஏசு, திருநாவுக்கரசர், காந்தி போல் அடியோடு விட்டுத் தொலைக்க வேண்டும். இல்லையானால் பணத்திற்கு நாம் அடிமையாகாமல், நமக்கு அதை அடிமை ஆக்கிக்கொண்டு ஆட்டிப்படைக்க வேண்டும்.

★ படிப்பால் அறிவு வளருமே தவிர, ஒழுக்கம் வந்து விடாது. விளக்கு ஏற்றினால் வீட்டில் ஒளி பரவுமே தவிர, தூய்மை வந்துவிடாது; விளக்கின் வெளிச்சத்தால் தும்பும் தூசியும் அழுக்கும் போய்விடுவதில்லை. இருள்தான் போகும். அழுக்கும் துளசியும் இருப்பது விளக்கு ஏற்றினால் கண்ணுக்குத் தெரியும். விளக்குமாறு எடுத்துப் பெருக்கினால்தான் அவை போகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/203&oldid=1224438" இலிருந்து மீள்விக்கப்பட்டது