பக்கம்:அறவோர் மு. வ.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

205


  • யாக வாழ்கின்றனர்; அவற்றிற்குத் துன்பம் வந்தாலும் விரைவில் மாறிவிடுகின்றது. மனிதன் நடத்தும் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவு; துன்பம் வந்தால் விரைவில் மாறுவதும் இல்லை; அதை மறக்காமல் நினைத்து நினைத்து வருந்துவதற்கு மூளையும் இருக்கிறது.
  • சாவு என்பது வாழ்வுக்குத் தேவையானது. சாவும் வாழ்வும் சேர்ந்தால் வட்டம். இது இல்லையானால் அது இல்லை. இலை பழுத்து வாடி உதிர்ந்தால்தான், தளிர் பசுமையாகத் தோன்றுகிறது. பழுப்பதும் துளிர்ப்பதும் போல்தான் சாவும் வாழ்வும்.
  • பொதுவாக, தமிழன் முதலில் தன்னை நினைக்கிறான்; தன்னையே நினைக்கிறான். பிறகுதான் சில வேளைகளில் மேற்போக்காக மொழியையும் நாட்டையும் நினைக்கிறான். இவ்வளவு தன்னலம் முதிர்ந்திருப்பதால்தான் மிகப் பழங்காலத்திலிருந்தே பண்பாடு மிக்க இனமாக விளங்கியிருந்தும் இன்று தாழ்வான நிலையில் கிடக்கிறது.
  • அறிவுரையால் பெரும்பாலோரின் மனத்தைத் திருத்தலாம் என்பது வீண் கனவு; அழும் குழந்தையை முத்தமிட்டு அமைதிப்படுத்த முயலும் தாயின் முயற்சி போன்ற வீண் கனவுதான். வாழ்வின் அடிப்படைத் தேவைகளைத் தந்து, தக்க சட்டமும் சூழ்நிலையும் ஏற்படுத்தினால்தான் பெரும்பாலோரைத் திருத்த முடியும்.
  • மனம் வானளாவ உயர வேண்டியதாக இருக்கலாம். ஆனால் தான் வேரூன்றிய மண்ணை மறந்து வாழ முடியாது; வானைப் புறக்கணித்துக் கிளைகளை உயர்த்தாமல் வாழவும் முடியாது. இந்த உண்மையை நன்கு உணர்ந்தவர் திருவள்ளுவர். அறநெறியும் வேண்டும், பொருள் வளமும் வேண்டும், இன்ப
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/208&oldid=1224457" இலிருந்து மீள்விக்கப்பட்டது