பக்கம்:அறவோர் மு. வ.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அறவோர் மு. வ.



"செய்வன திருந்தச் செய்ய வேண்டும். படிப்பில் செம்மையாக இருந்தால்தான் பிறகு கொள்ளைக்காரன்

ஆனாலும் அதையும் செம்மையாகச் செய்ய முடியும். இதிலேயே அரைகுறை என்றால் எதிலும் அரைகுறையாகத்தான் முடியும்."
-அகல் விளக்கு, பக். 253



"எப்போதும் வேகம் வேண்டா. அது உன்னையும் கெடுக்கும் உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்."
-அகல் விளக்கு, பக். 406

தவறு செய்து பின் திருந்தியவர்கள் என்றால் அவர்கள் அடக்கமும் விட்டுக்கொடுக்கும் இயல்பும் உடையவர்களாக இருத்தல் வேண்டும் - இருப்பார்கள் என்பதை,



"ஒரு தவறும் செய்யாமலே நெறியாக வாழ்கிறவர்களுக்குச் செருக்கும் பிடிவாதமும் மிகுதியாக இருக்கும். தவறு செய்து திருந்தியவர்களுக்கு அடக்கமும் விட்டுக் கொடுக்கும் பண்பும் பொருந்தியிருக்கும்"
-நெஞ்சில் ஒரு முள், பக். 291.

என்று நெஞ்சில் ஒரு முள்ளில் சுட்டுகின்றார்.

மனித வாழ்க்கை மிகச் சிறியது - குறுகியது என்பதை உணர்ந்த மு. வ. அவர்கள்,



"நம் வாழ்க்கை இந்த உலகத்தை நோக்கக் கடலில் ஒரு துளி போன்றது. இந்தச் சிறு வாழ்க்கையில் எல்லாற்றையும் அறிய முடியாது. எண்ணியவற்றையெல்லாம் செய்யவும் முடியாது. வாய்ப்பும் குறைவு. வாழ்நாளும் குறைவு. ஆகையால் நம் பங்கு மிகமிகச் சிறியது. வாழ்க்கையில் எல்லாம் பெற முடியாது. எல்லாம் அறிய முடியாது. எவ்வளவோ பெறாமல் அமைதி அடைய வேண்டும். எவ்வளவோ அறியாமல் அமைதி அடைய வேண்டும்"


-அல்லி; பக். 113.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/55&oldid=1209933" இலிருந்து மீள்விக்கப்பட்டது