பக்கம்:அறவோர் மு. வ.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

57

இயல்பினைப் பலவாறாக உரைத்துச் செல்கின்றார். வாழ்வும் சாவும் வாழ்க்கைக்கு இன்றியமையாதன என்பது மு. வ. அவர்கள் கருத்து.

"சாவு என்பது வாழ்வுக்குத் தேவையானது. சாவும் வாழ்வும் சேர்ந்தால் வட்டம். இது இல்லையானால் அது இல்லை. பழுத்து வாடி உதிர்ந்தால்தான் தளிர் பசுமையாகத் தோன்றுகிறது. பழுப்பதும் தழைப்பதும் போல்தான் வாழ்வும் சாவும்.”
-மண்குடிசை, பக். 109

என்பதனால் இது தெளிவாகின்றது. யாராவது ஒருவர் இறந்தால் அதற்காக அழுதால்,

"கடவுளின் ஆட்சிமுறையைப் பழிப்பதுபோல் ஆகுமாம். விரும்பாதது போல் ஆகுமாம்."
-மண்குடிசை, பக். 430

‘மரணம் இயற்கையானது. அது வரும்போது வரட்டும். அதுவரையில் வாழ்ந்தே தீர வேண்டும். வாழும் நாட்களில் கவலையைக் குறைத்து வாழவேண்டும்’ (பக். 392, 413) என்று நெஞ்சில் ஒரு முள்ளில் கூறுகின்றார்.

எல்லா உயிரும் ஒன்று என்பதை வலியுறுத்தும் சட்டம் மரணமே என்பதை,

"படைத்தவன் நோக்கம் எல்லாம் ஒன்று என்று உணரச் செய்வதுதானே! மரணம் ஒன்று தானே அதைத் தெளிவாக்கி வருகிறது! ஆகையால் கடவுளின் ஆட்சி வன்மையான சட்டம் மரணம்தான். மரணம் இல்லையானால் கடவுளின் ஆட்சி இல்லை என்று ஆகும். எல்லா உயிரும் ஒன்று என்பதை வலியுறுத்தி உணர்த்தும் சட்டம் அதுதான்"
-குறட்டை ஒலி, பக். 103

என்று குறட்டை ஒலியில் குறிக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/60&oldid=1209954" இலிருந்து மீள்விக்கப்பட்டது