பக்கம்:அறவோர் மு. வ.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

61

ராய்த் திகழ்ந்தவர். எனவேதான் அவர்தம் படைப்புகள் கருத்துகளைத் தாங்கிய கலைக்கூடங்களாய்த் திகழ்ந்தன. பல்துறைக் களஞ்சியமாக விளங்கிய மு. வ. வின் பதின்மூன்று நாவல்களும், சிறுகதைத் தொகுதிகள் இரண்டும், நாடகங்கள் ஆறும், ஆங்கில நூல்கள் இரண்டும், இலக்கிய நூல்கள் இருபத்துநான்கும், சிறுவர் இலக்கியங்கள் நான்கும், கட்டுரைக் களஞ்சியங்கள் பதினொன்றும், பயண இலக்கியம் ஒன்றும், வாழ்க்கை வரலாற்று நூல் நான்கும், மொழியியல் நூல்கள் ஆறும், சிறுவர் இலக்கண நூல்கள் மூன்றும், மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டும், இலக்கிய வரலாற்று நூல் ஒன்றும் அவர்தம் கலைத்திறனோடு வெளியிடும் வெளிப்பாட்டுத் திறனுக்குச் சான்றாகத்தக்கன.

மு. வ வின் நாவல் நெஞ்சம்

டாக்டர் மு. வ. நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களில் தம் கலைத்திறனை வெளிப்படுத்தியிருந்தபோதிலும் நாவலாசிரியர் என்ற சிறப்பு முத்திரையாலே குறிக்கப் பெற்றவர். அதற்கு எண்ணிக்கை காரணமன்று; அவற்றுள் எடுத்துரைக்கப் பெற்றுள்ள எண்ணங்களே காரணமாகும். மற்ற இலக்கிய வடிவங்களைக் காட்டிலும் நாவல் வடிவத்தை விரும்பியதற்குக் காரணங்கள் அவருடைய சமுதாய உணர்வும் நாவல் ஒரு பரந்துபட்ட விரிந்த வடிவம் என்பதும் ஆகும். மதுரைப் பல்கலைக்கழகத்தில் 9-9-74 அன்று நடைபெற்ற அகிலன் கருத்தரங்கத் தொடக்க விழாவில் டாக்டர் மு. வ. ஆற்றிய உரை, அவர்தம் எழுத்துணர்வையும், நாவல் நெஞ்சத்தையும் புலப்படுத்துவதாக அமைந்திருந்தது. தமிழ்ப் பேராசிரியர் பதவியிலிருந்து நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டேன். துணைவேந்தர் பதவியிலிருந்து இன்னும் சில திங்களிலோ, ஒர் ஆண்டிலோ விடைபெற்று விடுவேன். நான் கடைசி வரையில் ஒய்வு பெற விரும்பாத பதவி ஒன்று உண்டு என்றால் அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/64&oldid=1210047" இலிருந்து மீள்விக்கப்பட்டது