பக்கம்:அறவோர் மு. வ.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

63

மக்களுக்குக் கவர்ச்சி மிகுதியாவதற்காகத் துப்பறியும் கதைகளை எழுத முன்வந்தனர். ஆகவே இலக்கியத்தரம் உள்ள கதைகளை நாடியவர்கள், வங்காளம் முதலான பிற இந்திய மொழி நாவல்களையும், ஆங்கிலம், பிரெஞ்சு முதலான ஐரோப்பிய மொழிகளின் நாவல்களையும் நாட வேண்டியதாயிற்று. அதனால் மொழிபெயர்ப்பு நாவல்கள் தமிழ் நாட்டில் மிகுதியாக வரவேற்கப்பட்டன என்று டாக்டர் மு. வ. குறிப்பிடும் கருத்து நாவல் இலக்கிய வரலாற்றின் மைல் கற்களை அறிய உதவுவதாகும். சுதந்திர காலகட்டத்தில் ஒரு வளர்ச்சி மையத்தைப் பெற்ற ‘நாவற்கலை' கல்கியின் வரவால் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சி நிலையை எய்தியது. இயக்கப் பார்வையுடன் இணைந்த அறிஞர் அண்ணாவின் நாவல்களும், இலக்கிய வளாகத்திலிருந்து தோன்றிய டாக்டர் மு. வ. வின் நாவல்களும் இளைஞர்களின் பார்வையை ஈர்த்து நின்றன. இம்மூவருள் டாக்டர் மு.வ. விற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

உலகத்தில் நாவல் இலக்கியம் என்பது வார, மாத ஏடுகளின் துணையைக் கொண்டே வளர்ந்து வந்துள்ளது. மக்களின் எண்ணங்களைப் புத்திலக்கியத்தின் திசையில் திருப்பிய கல்கி அவர்கள், தம் கலைப்படைப்புகளை எல்லாம் விமோசனம், நவசக்தி, ஆனந்தவிகடன், கல்கி ஆகிய ஏடுகள் வழிதான் வெளியிட்டார். அறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை, திராவிடநாடு, காஞ்சி முதலிய ஏடுகள் வழியே இளைஞர்களின் சிந்தையைக் கவர்ந்தார். இன்றும் ஏடுகளின் துணையின்றி எந்த எழுத்தாளரும் மக்களின் எண்ணங்களில் இடம்பெறவில்லை. ஆனால் டாக்டர் மு.வ. எந்த ஏட்டின் துணையுமின்றி, பதிப்பாளர்களின் உதவியுமின்றித் தம் எழுத்தாலே இளைஞர் சமுதாயத்தின் மகத்தான வரவேற்பைப் பெற்றார். இச்சிறப்பு அவர்தம் கலைத்தன்மைக்கு ஒரு தனி முத்திரை என்றே கூறலாம். தனி முயற்சியால் வெற்றி கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/66&oldid=1210056" இலிருந்து மீள்விக்கப்பட்டது