பக்கம்:அறவோர் மு. வ.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அறவோர் மு.வ.

காவியமோ', 'அரசியல் அலைகள்', 'மொழியியற் கட்டுரைகள்' ஆகிய மூன்று நூல்களும் பெற, 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்', 'மொழி நூல்', 'விடுதலையா', 'ஓலைச்செய்தி' ஆகிய நான்கு நூல்களும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டினைப் பெற்றன. இவருடைய நூல்கள் ஆங்கிலம், உருசியம், சிங்களம், இந்தி, மராத்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1952ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஐந்தாம் தமிழ் விழாவில் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் ‘சங்க இலக்கியம்' என்னும் பொருள் குறித்துச் சொற் பெருக்காற்றினார். தலைமை தாங்கிய அந்நாளைய இலங்கை அரசாங்க அஞ்சல் துறை அமைச்சர் நடேசன் அவர்கள் மு. வ. அவர்களை அவையினருக்கு அறிமுகப்படுத்தும்போது 'தமிழ்நாட்டின் இலக்கிய நோபல் பரிசாளர்' என்று குறிப்பிட்டார்.

இத்தகு பீடுசால் பெருமை மிக்க டாக்டர் மு. வ. அவர்கள் பதின்மூன்று நாவல்களையும், சிறுகதைகள் இரண்டனையும், சிந்தனைக் கதைகள் இரண்டனையும், நாடகம் ஆறனையும், இலக்கிய நூல்கள் இருபத்து நான்கனையும், கட்டுரை நூல்கள் பதினொன்றனையும், சிந்தைக்கினிய சிறுவர் இலக்கியம் நான்கனையும், சிந்தனைக்குரிய கடித இலக்கியம் நான்கனையும், பயண இலக்கியம் ஒன்றனையும், வாழ்க்கை வரலாற்று நூல்கள் நான்கனையும், மொழியியல் நூல்கள் ஆறனையும், ஆங்கில நூல் இரண்டனையும், சிறுவர் இலக்கண நூல் மூன்றனையும், மொழி பெயர்ப்பு நூல் இரண்டனையும், இலக்கிய வரலாற்று நூல் ஒன்றனையும் தமிழ்கூறு நல்லுலகிற்கு இனிமையுற இயற்றியளித்த தமிழர்; கலைஞர்; அறவோர் ஆவர். இந்த மூவருள் அவரை அறவோராகக் காண்பதே இப்பகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/9&oldid=1202828" இலிருந்து மீள்விக்கப்பட்டது