பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சிரமற்ற போதும் சேர்ந்த சிந்தைகள் சிதறா தொன்றி
உரமுற்ற காதல் தன்மை உணராம லுள்ளம் நோகத்
‘தரமற்ற’ தென்று கூறித் தடுத்திடின் தாங்கா தந்தோ !
பரமற்றிங் கிகமு மற்றுப் பாவத்துக் காளா வோம்நாம்!

நேசித்து விட்டால் நெஞ்சில் நீங்காது நிலைத்து நிற்கும்
மாசித்து! - காதல் தோன்றி மலராமுன், மனத்தில் ஊன்றி
யோசித்துக் காலம் தாழ்த்தா துடனடி யாகப் போய்ப்பெண்
பேசித்தான் முடிப்பீர், வீட்டுப் பெருமையும் குறையா முன்னே!

‘வருமுன்னர்க் காவான் வாழ்வு வளமுற வளர்ந்த தேனும்
எரிமுன்னர் வைத்தூ றாகும்’ என்றுவள் ளுவனார் ஓர்ந்து,
பெருமன்னர்க் குரைத்த வாய்மை பேணாது பிழைத்த பின்பு
தருமின்னற் கென்ன வைத்துத் தடுத்துநாம் தழைப்ப”

தென்றாள்,


சத்தியன், தம்பி தவறு செய்யானெனல்வேணிக்கும் நித்ய னுக்கும் வேலியாய் விளங்கி வந்த
மாணிக்கம், மனமும் நொந்து மனைநடப் புரைக்கச் சத்யன்,
“ஆணிக்குக் கிடைத்த மூங்கில் அன்றுநான், இரும்பு காண்! நீ
பாணிக்கு மளவில் தம்பி பண்பற்ற படிற னன்றே!

'மயிர்நீப்ப உயிர்வா ழாத மானன்ன மனித ரென்றும்
செயிர்நீப்ப வாழ்வ ரன்றிச் சிறுபிழை கூடச் செய்யார்!
உயிர்நீப்ப வரினு மோர்ந்த உண்மைக்கு மாறாய்த் தங்கள்
பெயர்நீப்ப வொப்ப ரென்ற பேருண்மை மறந்து விட்டாய்!

நீதியும் கெட்டு, நாடு நெறிகெட்ட நிலையில் கூடக்
காதலை மட்டும் கட்டுக் கதைகளாய்க் கட்டி வாழும்
பேதைகள் பெருகும் வீட்டில் பிறந்தவ ளான தால், நீ
வேதனை கட்டி விட்டாய் வேண்டாத சொற்க ளிட்டே!