பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

'புல்லையே தின்று வாழும்‌ புலியுள' தெளின்‌நீ, 'பூவில்‌
இல்லை'யென்‌ றெதிர்த்து நான்வே றியம்பிடேன்‌, எனது தம்பி
நல்லவன்‌; அறிஞன்‌; என்றும்‌ நடுநிலை தவறான்! 'நல்ல
முல்லையும்‌ நாறிற்‌ றின்று முடை'யெனல்‌ முறையன்‌' றென்றான்.

மாணிக்கம்‌ மறுத்துரைத்தல்‌

"பொய்க்கதை புனைவோர்‌ போற்றும்‌ புரவலன்‌ புதல்வி பொய்யள்‌;
மெய்க்கதை புனைவோர்‌ மேவும்‌ மேதையின்‌ மனைவி மெய்யள்‌!
பைக்கிதைப்‌ போட்டுக்‌ கொஞ்சம்‌ பத்திரப்‌ படுத்தி வைத்தால்‌
கைக்கதை யாகி, மெய்பொய்‌ காட்டிடும்‌ நாளைக்‌” கென்றாள்‌.

சத்தியன்‌ சஞ்சலமடைதல்‌

குறிப்பினால்‌, தன்னைக்‌ கொண்டாள்‌ கூறிய கொடுமை கேட்டுப்‌
பிறப்பினால்‌ பெறுவ தெல்லாம்‌ பேணிடப்‌ பெற்ற சத்யன்‌,
'இறப்பினா லெய்து மின்னல்‌ இதற்கிணை யாகா' தென்ன
மறிப்பினால்‌ மடங்கி, மற்றும்‌ மதிமாழ்கி மயங்கப்‌ பெற்றான்‌.

காசொன்று மண்ணில்‌ வீழ்ந்து கலங்கிடும்‌ உலுத்தன்‌ போலும்‌
தூசொன்று கண்ணில்‌ வீழ்ந்து துடித்திடும்‌ குழந்தை போலும்‌
மாசொன்று மனத்தில்‌ வீழ்ந்து மாழ்குதல்‌ பண்ண, மாயாத்‌
தேசொன்று தெருவில்‌ வீழ்ந்து தேயுமே! எனத்தேய்ந்‌ திட்டான்‌.

கயலாத லன்றி ஒப்பே காணாத கண்ணாள்‌ வாயில்‌
பயிலாத சொற்க ளின்று பயின்றதைப்‌ பகுத்தா ராய்‌ந்து,
வெயிலாத லனைய சீற்றம்‌ விரைவாகக்‌ குறைந்து, "வேணிக்‌
கியலாது; தம்பி காதல்‌ ஏற்காதென்‌ னிதய" மென்றான்‌.

பொழுது புலர்ந்தது

'நடந்தது நல்ல' தென்றே நகர்ந்திட இரவுப்‌ போது,
'மடிந்தது மறைய' வென்றே மாங்குயில்‌ பாடும்‌ போது,
'படிந்தது போது' மென்றே பகலொளி பயக்கும்‌ போது,
'விடிந்தது வேளை' யென்றே விரித்தது கமலப்‌ போது!