பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

தனிமை நாடித் தடம்‌ பெரழில்‌ சேரல்‌

'அன்னையு மில்லை யன்போ டாறுதல்‌ கூறித்‌ தேற்ற!
முன்னையு மல்ல லுற்றிம்‌ முகம்களை யற்ற தில்லை!
என்னையித்‌ தொல்லை யின்றிவ் விளைஞனுக்‌ கெனக்க னிந்து
புன்னையின்‌ குளிர்ந்த பொங்கர்ப் போதுகை யசைத்தல்‌ போலும்‌!

அழல்தந்து கவிழ்த்த தன்ன அண்ணன்சொல்‌ புகுந்த காதில்‌,
குழல்தந்து குவித்த தென்னக் குயிலிசை யமிழ்து கொட்ட,
நிழல்தந்து காத்த புன்னை நிலைகண்டு நெகிழ்ந்த தேமா
பழந்தந்து பசியைத்‌ தீர்க்கப் பரிவுடன்‌ முயலும்‌ போலும்!

நெஞ்சில் நேரிழை

சேயென்ன வந்தோன்‌, வெந்த சிந்தைசெந்‌ தண்மை சேரத்‌
தாயென்னப்‌ பரிவு கூர்ந்த தருக்களின்‌ நிழலில்‌ குந்த,
வேயன்ன தோளாள்‌, வெற்று வேலன்னா விழியாள்‌ வேணி,
ஆயென்ன நினைவுப்‌ பூவில்‌ அளியென்ன அமர லானாள்‌.

வேணியின்‌ நினைவு நெஞ்சில்‌ வீறுகொண் டெழவும்‌, வெந்த
ஆணியை யடித்த தன்ன அண்ணன்சொல்‌ லவல மும்தான்‌,
நாணிய தன்மை யுந்தான்‌, நலிவுற்ற புன்மை யுந்தான்‌,
மாணியல்‌ மருந்தை யுண்டு மறைந்தநோ யாயிற்‌ றன்றே

.

வேணியின்‌ வருகை விருந்தாக மாறல்‌

ஆவலோர்‌ வடிவோ? அன்றேல்‌ அழகொரு உருவோ? ஆகிப்‌
பூவிலே பிறந்தா ளொப்பப்‌ பொற்பொடு வேணி கையில்‌,
நாவிலே நீர்சு ரக்கும்‌ நால்வகை யுணவும்‌ கொண்டு,
காவிலே யிருந்தான்‌ கண்டு களித்திடக்‌ கரைந்து வந்தாள்‌.

ஏவொன்று குறியைத்‌ தப்பா தெய்திற்றின்‌ றெனவே, வேணி
காவொன்றி வந்து சேரக்‌ கண்டுளங்‌ களித்த நித்யன்‌,
“வாவென்றன்‌ வாழ்வே! நீதான்‌ வத்தவள்‌ முந்தி! யிங்கே
சாவொன்று வரலா மென்றே சந்திக்க இருந்தே” னென்றான்‌