பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

தன்னிலையறிந்து கன்னிகை நாணல்‌

"மிகைபடப்‌ பேசி யின்றென்‌ மேனியும்‌ குலுங்க, மெத்த
நகைபடச்‌ செய்தீ" ரென்று நாணத்தால்‌ சிணுங்கி, மோக
முகைபட முனிவாள்‌ போன்று "மொழிந்துவிட்‌ டினியும்‌ நின்றால்‌,
பகைபடும்‌ வீடும்‌; நானும்‌ பயப்படக்‌ கூடு" மென்றாள்,

இதயத்துள்‌ இருப்பாயெனல்‌

"மதியத்துள்‌ குவளை பூத்து, மணியிரண்‌ டவற்றுள்‌ பூத்தும்‌,
விதியொத்துப்‌ பவளம்‌ பூத்து, வெண்முத்த மவற்றுள்‌ பூத்தும்‌,
உதயத்து ளுடலும்‌ பூத்தோ ரொளியுள்ள மதனில்‌ பூத்தென்‌
இதயத்து ளிருக்கப்‌ பூத்தாள்‌ என்னைவிட்‌ டேகா" ளென்றான்‌.

உயிரா, தயிரா இவற்றில்‌ எது வேண்டுமெனல்‌

"பயிர்வேண்டி நிற்கும்‌ பாரை; பார்பயி ரினையே வேண்டும்‌!
பெயர்வேண்டி நிற்பர்‌ சான்றோர்‌; பேதைநான்‌ வேண்டு வேனேன்
உயிர்வேண்டு மென்றோ? அன்றேல்‌, உண்ணுமிச்‌ சோற்றுக்‌ கேற்ற
தயிர்வேண்டு மென்றோ சொல்வீர்‌ தாமதம்‌ வேண்டா" மென்றாள்.

மனம்‌ போன்று தருவாயெனல்‌

"எனைப்பேணுந்‌ தெய்வ மென்றும்‌ எனக்கெது வேண்டு மென்று
தனைப்பேணுந்‌ தரத்தி லோர்ந்து தான்பேனத் தவறா தேனும்,
நினைப்பூணின்‌ மேற்செல்‌ லாதென் நெஞ்சினைத் தடுத்தாட் கொண்ட
மனைப்பூணும்‌ மதியே! உன்றன் மனம்போன்று தருவா" யென்றான்.