பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

திடுக்கிட்டார் மாமா! தேர்ந்து தெளியாது திகைத்தான் சத்யன்;
நடுக்கிட்ட நல்லாள் சற்று நகர்ந்து நிற் பதற்குள் நித்யன்,
படிக்கட்டில் ‘படப’ டென்று பதற்றமா யிறங்கி வந்தோன்,
அடிக்கட்டில் நிற்கும் காத லணங்கின்மேல் மோதி நின்றான்,
                                   காரியத்தில் கண்
தடுமாறி விழுவாள் தன்னைத் தாவித்தோள் பற்ற நித்யன் ,
பிடிமாறிக் குலைந்த வேணி பேசாது தலையைத் தாழ்த்தக்
கடுமாறி யமிழ்தா மாறு கட்டியோர் முத்தம் தந்தே,
அடி மாறி விலகி நின் “றீ தறியாது நிகழ்ந்த” தென்றான்.

“அறியாது நிகழ்ந்த தேயோ? அறிந்திது நிகழ்ந்த தேயோ?
முறியாத காதற் கிஃதோர் முதல் முத்தம் பரிசம்! போதும்!
குறியாதூழ் குறுக்கிட் டின்று கூட்டிட நிகழ்ந்த தேனும்,
நெறியாது? நிலையா தென் று நினைத்தினி நடப்பீ” ரென்றாள்.

‘கலையாக வுள்ள தெல்லாம் கசடறக் கற்றே’ னென்று
மலையாக மதித்துத் தன்னை மமதையோ டிருந்தான் , மங்கை
‘நிலையாக- நேர்த்தி யாக , நெறிகண்டு நடப்பீ’ ரென்னச்
சிலையாக மலைத்து நின்றான் , செல்விசொல் திறனில் சிக்கி!

‘கண்ணென்று கருதத் தக்க காதலி ,- கரும்புக் கட்டி-
பெண்ணன்று! பிழையைக் காணின் பெருநெருப் பாவா’ ளென்றே,
தண்ணென்ற நிலவில், தென்றல் தனியர சோச்சும் நேரம்,
உண்ணின்று வியர்த்துக் கொட்ட ஊமையாய்ச் சென்றா னூர்க்குள்!

வெளியேறிச் சென்ற நித்யன் விரைவாக வீதி தோறும்
ஒளியேறித் துலங்கா நின்ற ஊர்ப்புறச் சேரிக் குப்போய்,
அளியே ற அணுகிக் கூலி யாட்களை யழைக்க லானான்;
களியேற விளைந்த கம்பங் கதிரறு வடைசெய் தற்கே.