பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

நடைமுறையை நித்தியன் நயம்பட நவிலல்‌


"அறிவதை யறிதற்‌ கென்‌னும் அவகாச மவர்கட் கீயோம்;
உறுவதை யுணர்தற்‌ கொண்ணா வூமைக ளாக்கி யுள்ளோம்;
மறுவிதை விதிமே லேற்றி மாடுபோ லுழைக்கச் செய்தோம்!
பெறுவதைப்‌ பிரித்தீ யாமற் பேராசை வசமாய் நாமும்!

நீதிக்கிங்‌ கிடமே யின்றி, நெஞ்சினி லீர மின்றிச்
'சாதிக்குச்‌ சாதி நாட்டில்‌ தாழ்வுயர்' வென்று சாற்றிப்
பாதிக்கு மதிகம் பேரைப் படுநாசப் படுத்தி வைத்தோம்‌;
ஏதுக்கு வீண்வி வாதம் என்னுட னிடுகின் றீர்நீர்?

கொடுத்தினி வாழ வேண்டும் குணமாக நாமும்‌! கூறின்,
அடுத்தினி நடப்ப தெல்லாம்‌ அழிம்பினில்‌ முடியக்‌ கூடும்‌!
கடுத்தினி யென்னை நீங்கள் காத்திட வைக்க வேண்டாம்‌;
படுத்தினித்‌ தூங்க வேண்‌டும் பசியாறி, யெழுங்க" ளென்றான்.

மாணிக்கம்‌ சுருங்கக் கூறல்


சார்ந்திது சரியன்‌ றென்‌னாச் சத்திய னெழுந்தான்;சாற்றிச்
சோர்ந்ததன்‌ தந்‌தை காதில்‌ சுருக்கமாய்ச்‌ சொன்‌னாள்‌ செல்வி:
"ஓர்ந்தினிக் கொழுந்த வனுக்கிங்‌ கொன்றுமே யுரைக்கா தீர்நீர்;
தேர்ந்தவன்‌ செப்பும்‌ பெண்ணைத் திருமணம் முடிப்போ" மென்றே

மாமா தன்‌ போக்கில்‌ நம்பிக்கை வைத்தல்‌


"பொருளாக இதனை யாரும் புத்தியில்‌ புகுத்தா தீர்கள்‌;
இருளாக இருக்கும்‌ நேரம் எப்போது மிருப்ப தில்லை;
அருளாக இயன்ற மட்டும்‌ அனைத்தையும்‌ அமையச்‌ சொன்னால்‌
மருளாகி யிருப்பான் நெஞ்சும்‌ மாறு"மென்‌ றெழுந்தார்‌ மாமா.