பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

காரணங்காட்டி வேறு கூறெனல்



தீதுநன் றிவற்றைத் தீரத் தெளிவாகத் தெரிந்த பின்னா
லேதிது வென்று கூறி யேற்பதும் எறிவ தும்செய்
யாதுநீ, யறியா தெம்மை யசடர்க ளாக்கி வைத்தால்.
பேதையே! யுனக்கு நீயே பிணிதேடிக் கொள்வா" யென்றார்.

நித்யன் நேர்விடை


"சிறியதோர் சிட்டே தான் நான்; சிந்தும்நெல் சேர்ந்து தின்னும்
வறியதோர் வாழ்வுக் கென்னை வாடிக்கை யாக்கிக் கொண்டேன்;
குறியதோர் கூடு கட்டிக் கொண்டதில் குடிகொள் வேனென்
நெறியிதே! யினியி தில்நீர் நிற்காதீர் குறுக்கிட்" டென்றான்.

இருவரும் தர்க்கித்தல்


"துறையற்ற மரக்க லம்போல் தொல்லைக்குள் ளாகா மல்நீ
குறையற்று வாழ்தல் வேண்டிக் குறித்திது கூறா நின்றேன்;
நிறைவுற்ற செல்வ முன்னை நேரெதிர் கொள்ளும் நேரம்,
முறையற்று மொழியேல்; வாழ்வில் முக்கியம் பணந்தா" னென்றார்.

"பாடீசு வரர்க ளெல்லாம் படித்தினிப் பட்டம் பெற்ற
நாடீசு வரர்களாகி நாளைக்கு வருவா ராயின்,
கோடீசு வரர்கள் கொட்டும் கும்மாளம் குலைந்து, கூட
வாடீசு வரர்க ளாகி வருந்திடத் தீரும் மாமா!

விதியாட்சி செய்த காலம் விழுந்தது விழாக்க ளாகி;
சதியாட்சி செய்த காலம் சரிந்தது சமர்க ளாகி;
நிதியாட்சி செய்த காலம் நீங்கிற்று நிரப்பே யாகி;
மதியாட்சி செய்யும் காலம் மலருதிம் மண்ணி" லென்றான்.