பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

புவனமே போற்றப்‌ பொல்லாப்‌ புலனெலா மடக்கிப்‌ பூவில்‌
தவமெனப்‌ புரிந்தோர்‌ தந்த தலையாய வுணர்வி தன்றோ?
'அவனன்றி யுலகில்‌ யாதோ ரணுவேனு மசையா' தென்றே!
இவனென்ன செய்ய வுள்ளான்‌ இளங்கன்றாய்த்‌ துள்ளி யிங்கே?

'சீரெது? சிவமெ' தென்று! சித்தித்துச்‌ செப்ப னிட்டு,
'நேரெது நெறியெ' தென்று நினைவுட னெழுதி வைத்த
பாரத நாட்டுத்‌ தர்மம்‌, பவித்திர மான தர்மம்‌!
யாரெது செய்த போதும்‌ அணுவள வசைந்தி டாதே.

சொர்க்கமும்‌ நரக மும்தான்‌ சுருதிச்சொல்‌! சொல்வ தோரா
வர்க்கத்தில்‌ சேர்ந்து கெட்டு வாய்க்குவந்‌ ததனைப்‌ பேசித்‌
தர்க்கத்தி லிறங்கு கின்றான்‌, தடம்வழி தவறு மாறாய்த்‌
துர்க்குணம்‌ தோன்றி நாட்டில்‌ துயர்மூட்டி விடுதற்‌ கென்றே.

ஊட்டியே வளர்ப்போ னெல்லா வுயிரையும்‌ படைப்போன்‌ பால்‌,கை
நீட்டியே யிறைஞ்சி நின்று நிலத்தினில்‌ பிறவா முன்பே
கேட்டுவந்‌ திருந்தா லன்றிக்‌ கிட்டாது கிடந்து சாவோர்‌
கூட்டிலே கூடிக்‌ கொண்டேன்‌ குரைக்கிறான்‌ குட்டி நாயாய்‌?

நீசனை, யெதையு மாய்ந்து நெறியுடன்‌ சொல்லும்‌ நல்லோர்‌
வாசனை யில்லா தானை, வம்பர்க ளெழுதி வைத்த
தோசனை செய்து பாரா துளறியே கொட்டு வானை,
யீசனை நம்பா தானை யிருத்தினா யில்லத்‌ தில்நீ!

கோடானு கோடி மாந்தர்‌, குலைவற்றிக்‌ கும்பி காய்ந்து,
'வாடாப்பா! வெங்கள்‌ வாழ்வை வளம்பட வளர்த்தற்‌, காய்‌, நீ
நாடாள வா,வா!' வென்றே, நச்சினார்‌ போலும்‌ நாட்டார்‌!
போடாபோ! போக்கில்‌ லாத புலைத்தெரு நாயே”? என்றார்.