பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தூக்கம்‌ வந்தால்‌ துயரம்‌ தீருமெனல்‌

துயில்செய்யின்‌ துன்பந்‌ தீரத்‌ தூயவ ளுளத்தில்‌, தோகை
மயில்செய்யும்‌ நடனம்‌ மல்கும்‌! மலர்யாழில்‌ மனத்தை நட்டுப்‌
பயில்செய்யும்‌ சுரும்பின்‌ பண்கள்‌ பரவசம்‌ செய்யும்‌! பாகாய்க்‌
குயில்செய்யும்‌ கோலப்‌ பாடல்‌ குளுகுளுப்‌ புறவும்‌ செய்யும்‌!

இமைத்திடும்‌ நேரம்‌ கூட இமைமூடா திவ்வா றாயிவ்‌
வமைத்தடந்‌ தோளிக்‌ கொன்றி யலர்ந்திடும்‌ வேட்கை நெஞ்சைக்‌
குமைத்திடும்‌ பொழுதில்‌, கோழி கூவிற்றென்‌ றக்கா கூவிச்‌
சமைத்திட வேண்டும்‌; வேணி, சமர்த்தென எழுந்தி' ரென்பாள்.

வேணிக்கு விடிந்தது

முப்போதும்‌ முழுப்போ தாகி, முகஞ்‌சுழிக்‌ காதப்‌ போதும்‌
இப்போது மலர்ந்த தென்ன இலங்குவா ளிரவில்‌ தூங்‌க
எப்போது முயன்றாள்‌? காலை எப்போது விழித்தா ளென்றால்‌,
செப்பேது மில்லை; யெல்லாம்‌ செய்கிறாள்‌ விடியும்‌ போதே!

குளித்துடல்‌ மாசு போக்கிக்‌ கோதிடும்‌ கூந்த லில்நீர்‌
துளித்திடத்‌ தேநீ ரேந்தித்‌ துயின்‌றிடு மறைக்குள்‌ நித்யன்‌
விளித்திடுங்‌ குரலெ ழாமுன்‌, விருப்புடன்‌ வந்தாள்‌; நெஞ்சம்‌
களித்திடத்‌ தயங்கிக்‌ கண்டு, "கண்விழித்‌ தெழுவீ" ரென்றாள்‌.

வெற்றியின்‌ வெறியில்‌ வீழ்ந்து விழிமூடி யுறங்கும்‌ வீரன்‌
நெற்றியில்‌ தளிராய்‌ நீவ, நினைவுகூர்த்‌ திட்ட நித்யன்‌,
முற்றிய முறுவல்‌ முந்த, மொழிபிந்த மொழிந்தான்‌: "முற்றக்‌
கற்றஎன்‌ கவினே! நெற்றி கடைத்தேற லுற்ற தின்றே!